இடிந்து விழுந்த சத்ரபதி சிவாஜி சிலை.. பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் உள்ளது- காங்கிரஸ்!
மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஒப்பந்ததாரர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சத்ரபதி சிவாஜி சிலை
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி, கடற்படை தினத்தன்று 35 அடி உயரம் கொண்ட மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிலையில் சிந்துதுர்க்கில் கடந்த 3 நாட்களாகக் கனமழை பெய்தும், சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது.
இந்தச் சூழலில் நேற்று அடித்த பலத்த காற்றினால் சத்ரபதி சிவாஜியின் சிலை நிலைதடுமாறி கீழே உடைந்து விழுந்தது. இதில், தலை, கை, கால் என அனைத்துப் பாகங்களும் தரையில் விழுந்து சிதறின. இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் தற்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்தது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்தார். மேலும் பொதுப்பணித்துறையினர் மற்றும் கடற்படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் .
வழக்குப்பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் ஜெய்தீப் ஆப்தே மற்றும் கட்டமைப்பு ஆலோசகர் சேத்தன் பாட்டீல் மீது சிந்துதுர்க் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக இந்த சம்பவம் குறித்து x தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் உள்ளது. டிசம்பர் 4, 2023 அன்று சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலையை நரேந்திர மோடி திறந்து வைத்தார்.சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு தற்போது சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை இடிந்து விழுந்தது.
ஊழல் விவகாரத்தில் பெரிய மனிதர்களைக் கூட விட்டுவைக்க முடியாத சூழல் உள்ளதாக குற்றசாம்சட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.