கடவுளுக்கே பிடிக்கலையா.. அம்பேத்கரை கும்பிட்டுக்கிறோம் - தலித் குடும்பம் விரக்தி
பட்டியலின குடும்பத்திற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை தொடர்ந்து, மனவேதனையில் உள்ளனர்.
தலித் சிறுவன்
பெங்களூர், கோலார் மாவட்டம் கோவில் திருவிழாவில், தலித்துகள் கிராம தெய்வத்தின் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கிராமத்தில் ஊர்வலம் செல்லும்போது 15 வயது சிறுவன், கிராமத்தின் தெய்வமான சிடிரண்ணாவின் சிலையுடன் இணைக்கப்பட்டிருந்த கம்பத்தை தொட்டார்.
அதனை கவனித்த கிராமவாசியான வெங்கடேசப்பா, அத்துமீறல் நடந்ததாகக் கூறி, அவரது குடும்பத்தினரை ஊர் பெரியவர்களிடம் ஆஜராகச் சொல்லி உள்ளதாக தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிறுவனின் தாயான ஷோபம்மாவிடம், அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் ரூ.60,000 அபராதம் கட்டச் சொன்னதையடுத்து கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.
60ஆயிரம் அபராதம்
அபராதம் கட்டத் தவறினால், “கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவார்" என்றும் கூறப்பட்டது. அந்த கிராமத்தில் சுமார் 10 பட்டியலின குடும்பங்கள் உள்ளன. ஷோபம்மாவின் வீடு, பட்டியலினத்தவர் வாழும் கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ளது.
அவரது மகன் தெகல் கிராமத்தில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஷோபம்மாவின் கணவரான ரமேஷ் நோய்வாய்ப்பட்டிருப்பதால், ஷோபம்மா மட்டுமே வேலைக்குச் செல்கிறார். இந்நிலையில், அவர் “கடவுளுக்கு நாம் தொடுவது பிடிக்கவில்லை என்றால்,
விரக்தியில் குடும்பம்
மக்கள் நம்மை ஒதுக்கி வைக்க விரும்பினால், நாம் பிரார்த்தனை செய்து என்ன பயன்? மற்றவர்களைப் போலவே நானும் பணத்தைச் செலவழித்திருக்கிறேன், கடவுளுக்கு நன்கொடை அளித்திருக்கிறேன். இனிமேல், நான் அப்படி எதுவும் செய்யமாட்டேன்,
டாக்டர் பி ஆர் அம்பேத்கருக்கு மட்டுமே பிரார்த்தனை செய்துகொள்கிறேன்,”என்று மனவேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் நாராயணசாமி,
கிராமப் பிரதானின் கணவர் வெங்கடேசப்பா, பஞ்சாயத்து துணைத் தலைவர் மற்றும் இன்னும் சிலரின் மீது சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் பயன்படுத்தி வழக்கு பதிந்துள்ளனர்.