EMI வசூலிக்க சென்ற ஊழியர்.. எரிந்த நிலையில் சடலமாக மீட்பு சம்பவம் - நடந்தது என்ன?
பைனான்ஸ் நிறுவன ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்
தஞ்சாவூர் மாவட்டம், கஞ்சனூர் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில்,கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஜெயங்கொண்டத்தில் உள்ள தவணைப் பணத்தை வசூலிப்பதற்காகச் சென்றுள்ளார்.
அங்கு மகேஷ் என்பவரிடம் காருக்கு 4 மாத தவணைத் தொகையாக 52 ஆயிரம் ரூபாய் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இவரிடம் வாங்குவதற்காகச் சிவா சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர் தேடி அலைந்துள்ளனர்.
எங்குத் தேடியும் கிடைக்காததால் சிவாவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்த அவர்கள் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே கோடாலி கிராமத்தில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அடித்துக் கொலை
உடனடியாக அங்குச் சென்று காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையின் முடிவில் பைனான்ஸ் ஊழியர் சிவா எனத் தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் மகேஷிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சிவா மகேஷ் வீட்டிற்கு வந்து இழிவாகப் பேசியுள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மகேஷ் பைப் ஒன்றை எடுத்து சிவாவைத் தாக்கியுள்ளார். இதில் சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் செய்வதறியாத திகைத்த மகேஷ் நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் பனை மட்டைகளை வைத்து உடலை எரித்ததாகப் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.மேலும் மகேஷை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.