தம்பி என்று கூறியதால் மகள் கொலை - பதிலுக்கு வீடு தேடி சென்று தந்தை வெறிச்செயல்
மகள் கொலை செய்யப்பட்டதால், தந்தை பழிக்குப்பழி வாங்கியுள்ளார்.
மகள் கொலை
கர்நாடகா, பாண்டவபூர் மாணிக்யனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவரது மனைவி தீபிகா(28). தீபிகா மேலுகோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார்.
கடந்த ஆண்டு வேலைக்கு சென்ற தீபிகா, வீட்டிற்கு திரும்பி வரவில்லை. நான்கு நாட்கள் கழித்து அவரது உடல், மேலுகோட் நரசிம்ம சுவாமி கோவில், மலை அடிவாரத்தில் பாதி புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. விசாரணையில், மாணிக்யனஹள்ளி கிராமத்தை சேர்ந்த நிதீஷ்(22) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தீபிகாவும், நிதீஷும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், நிதிஷை தன் தம்பி என்று கூறியுள்ளார். மேலும், குடும்பத்தினர் எச்சரித்ததால், நிதீஷுடன் பேசுவதை தீபிகா கைவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிதீஷ், தீபிகாவின் கழுத்தை நெரித்து கொன்று குழி தோண்டி புதைத்தது தெரியவந்தது.
பழிவாங்கிய தந்தை
தொடர்ந்து சிறையில் இருந்த நிதீஷ், சில மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்தார். நிதீஷ் சகோதரிக்கு அங்குள்ள கோவில் ஒன்றில் திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், நிதீஷ் தந்தை நரசிம்மகவுடா டீ கடைக்கு சென்று டீ குடித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த தீபிகாவின் தந்தை வெங்கடேஷ், என் மகளை உன் மகன் கொன்று விட்டான். உன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து, நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருக்க வேண்டுமா?” என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். உடனே வெங்கடேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நரசிம்மகவுடாவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே நரசிம்மகவுடா உயிரிழந்து விட்டார். நிதீஷ் சகோதரிக்கு விரைந்து வந்த போலீஸார் உடலை மீட்டு, தலைமறைவாக உள்ள வெங்கடேஷை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.