16 வயது மகளை கொடூரமாக கொன்று ஏரியில் வீசிய பெற்றோர் - கிருஷ்ணகிரியில் பயங்கரம்!
பெற்றோரே தங்களது மகளை அடித்து கொலை செய்து ஏரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பட்டவரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி பிரகாஷ் - மீனாட்சி. இவர்களின் 16 வயதான மகள் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமிக்கும், சிவா என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ், சிவா சிறைக்கு சென்று வந்துள்ளார்ர். வெளியில் வந்த பிறகு இருவரும் மீண்டும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடத்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறி அவருடன் பயணித்ததாக தெரிகிறது.
இதுகுறித்து பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, சிறுமியை அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மகளுக்கும், தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி மற்றும் பெரியம்மா மீனாட்சி ஆகியோர் சேர்ந்து, மகளை அடித்து கொலை செய்துள்ளனர்.
தந்தை வாக்குமூலம்
பின்னர் சிறுமியின் சடலத்தை பாகளூர் ஏரியில் வீசிவிட்டு, காவல்நிலையத்தில் காணவில்லை என புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவந்த நிலையில், சிறுமியின் உடல் ஏரியில் மிதந்துள்ளது.
உடனடியாக உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவத்தன்று வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா மறைக்கப்பட்டதால், வீட்டில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மகள் காதலை கைவிட மறுத்ததால் அடித்து கொலை செய்து ஏரியில் வீசியதாக தந்தை பிரகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை, தாய் மற்றும் பெரியம்மா ஆகியோரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.