கண்ணீர் புகைக்குண்டு; தகர்த்தெறிந்த விவசாயிகள், சட்டம் கொண்டுவர முடியாது - உச்சக்கட்ட பரபரப்பு!
விவசாயிகள் மீது நள்ளிரவிலும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டனர். தொடர்ந்து, றைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி, விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களுடன் டெல்லியை நோக்கி புறப்பட்டனர்.
கண்ணீர் புகை குண்டு
இந்நிலையில், ஹரியானா - டெல்லி எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் விவசாயிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கூட்டத்தை கலைக்க ட்ரோன்களை பயன்படுத்தி கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். காவல்துறையினர் அமைத்திருந்த கான்கிரீட் தடுப்புகளை டிராக்டர்கள் மூலம் இடித்து தள்ளினர்.
காவல்துறையினர் வீசிய கண்ணீர் புகை குண்டு வீச்சில், சுமார் 60 விவசாயிகள் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா,விவசாய சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் அவர்களது பல்வேறு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டோம்.
சில விஷயங்களில் உடன்பாடு ஏற்படவில்லை. அவசரகதியில் மத்திய அரசு சட்டம் கொண்டு வராது. என்ன மாதிரி சட்டம் கொண்டு வரலாம், அதன் சாதக, பாதகங்கள் என்ன என்று ஆலோசிக்க வேண்டும். அவசரகதியில் சட்டம் கொண்டு வந்தால், அது தோல்வியில் முடிந்து விடலாம்.
விவசாயிகளுக்கிடையே சமூக விரோதிகள் கலந்து, அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களை செய்ய வாய்ப்புள்ளது. அவர்களிடம் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.