வெண்டைக்காய் விலை வீழ்ச்சி.. டன் கணக்கில் ஏரியில் கொட்டிய வியாபாரிகள் - விவசாயிகள் விரக்தி!
தமிழகத்தில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
விலை வீழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம், மாணவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான ரமேஷ். இவர் விவசாயம் செய்து வருகிறார், வெண்டைக்காய் பயிர் செய்துள்ளார். மேலும் சுற்றுவட்டார விவசாயிகளிடம் வெண்டைக்காய் கொள்முதல் செய்து பிற நகரங்களில் விற்பனை செய்து வருகிறார்.
தற்பொழுது சில வாரங்களாக வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் விலை கிலோ 2 ரூபாய்க்கு குறைந்துள்ளது, இதனால் சார் வாடகைக்கு கூட பணம் கிடைக்கவில்லை.
விவசாயிகள் விரக்தி
இந்நிலையில், வியாபாரிகள் யாரும் வெண்டைக்காய் வாங்க முன் வராததால் அவர் வேறு வழியில்லாமல் விரக்தியில் 5,000 கிலோ வெண்டைக்காயை ஏரியில் கொட்டினார். மேலும், அவர் கூறுகையில், இதே நிலைமை நீடித்தால் விவசாயிகள் யாரும் பயிர்களை பயிரிடமாட்டார்கள்.
இதற்கு அரசு உடனடியாக வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.