மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் உயர்தர பயிற்சி பெறலாம் - மு.க. ஸ்டாலின் அழைப்பு!
மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் வந்து பயிற்சி பெறுமாறு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூரில் கலவரத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த இரு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வாணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காணொலி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் மணிப்பூரில் தற்போது நிகழ்ந்து வரும் அசாதாரண சூழ்நிலை காரணாமாக அந்த மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் வந்து பயிற்சி பெறுமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிக்கை
அந்த அறிக்கையில் "தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மாநிலமான மணிப்பூரில் உள்ள தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்க்கிறது.
மணிப்பூர் எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை, குறிப்பாக பெண் சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை அடுத்த ஆண்டு (2024) நடத்துவதற்கான மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்த போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது மணிப்பூர்மாநிலத்தில் ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால், அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பயிற்சிகள் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.
இவ்விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசுவிளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் உயர்தர பயிற்சிகள் அளிக்க ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வசதிகனை பயன்படுத்திக் கொள்ள அவர்களின் விவரங்களை அதாவது தங்கள் பெயர், முகவரி, அடையாளச் சான்று, தொடர்பு விவரங்கள், விளையாட்டு சாதனைகள் மற்றும் பயிற்சித் தேவைகள் போன்ற விவரங்களுடன் மின்னஞ்சல் - sportstn2023@gmail.com முகவரியில் மற்றும் தொலைபேசி எண். -91-8925903047 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.