பாகிஸ்தானை கொண்டாடிய சென்னை ரசிகர்கள் - 'அன்பு நெகிழ வைக்கிறது' - பாக். ரசிகர்கள்!
பாகிஸ்தான் அணியை கொண்டாடிய சென்னை ரசிகர்களின் அன்பு நெகிழ வைக்கிறது என்று பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் ரசிகர்கள்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த சனிக்கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.
அந்த போட்டியின்போது டாஸ் வென்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேசத்தொடங்கியபோதே இந்திய ரசிகர்கள் கடுமையாக கோஷம் போட்டு பேசவிடாமல் செய்தனர். பின்னர் ஆட்டத்தின் போதும், பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்யும் போதும் தொடர்ந்து இந்திய ரசிகர்கள் கோஷம் எழுப்பி அவர்களை பீல்டிங் செய்வதில் இருந்து தொந்தரவு செய்தனர்.
மேலும், அவமரியாதையின் உச்சத்துக்கே சென்று, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கி திரும்பும்போது ரசிகர்கள் சிலர் அவரை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்டனர்.
அதுமட்டுமல்லாமல் மைதானத்தில் டிஜே 'ஜெய்ஸ்ரீராம்' என்ற பாடலை போட்டிருந்தார். இந்த செயல்களால் பாகிஸ்தான் ரசிகர்களும், வீரர்களும் அதிருப்தியில் இருந்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி விவாதப் பொருளானது.
சென்னை ரசிகர்கள்
இந்நிலையில் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையேயான போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது சென்னை ரசிகர்கள் பலரும் பாகிஸ்தான் ஜெர்ஸியை அணிந்து வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பாகிஸ்தான் வீரர்கள் விளையாட வந்தபோது சென்னை ரசிகர்கள் அதனை கொண்டாடினார்கள். மேலும் முக்கியமாக பாபர் அசாம் ஆட வந்தபோது, பாபர்.. பாபர்.. என ரசிகர்கள் அவரை வரவேற்று கொண்டாடினார். சென்னை ரசிகர்களின் இந்த செயல் பாகிஸ்தான் ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பேசுகையில் "ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் அகமதாபாத் மைதானத்தில் 4 பாகிஸ்தான் ஜெர்ஸிகள் மட்டுமே பார்க்க முடிந்தது.
அங்கே பாகிஸ்தான் ரசிகர்களே இல்லை. எங்களுக்கு அங்கே ஆதரவு இல்லாமல் பிசிசிஐ நடத்தும் ஆட்டம் போன்ற சூழ்நிலை நிலவியது. ஐசிசி ஆட்டம் போலவே நிலைமை இல்லை. ஆனால் சென்னையில் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது.
இங்கே எங்களுக்கு பெரிய ஆதரவு இருக்கிறது . சென்னையில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் ஜெர்ஸி அணிந்து வந்து அவர்களுக்கு ஆதரவு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களின் ஆதரவு தென்னிந்தியாவை நேசிக்க வைக்கிறது" என்று பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பாராட்டி மகிழ்ந்துள்ளார்.