ரோஹித்தெல்லாம் இந்திய அணிக்கு கேப்டனா? கேட்டவர்களுக்கு பதிலடி - பாராட்டிய ஆஸி. வீரர்!
முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவை பாராட்டியுள்ளார்.
ரோஹித் ஷர்மா
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை ஆடிய 5 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது இந்தியா.
இதில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி குறித்து உலகக்கோப்பை தொடருக்கு முன்பு வரையும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தன. ஆனால் இந்த உலகக்கோப்பை தொடரில் அவரது கேப்டன்சி மிக சிறப்பாக உள்ளது. கேப்டன்சியில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அவர் அதிரடி காட்டி வருகிறார்.
கில்கிறிஸ்ட் பாராட்டு
இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் 'ஆடம் கில்கிறிஸ்ட்' பேசியதாவது "ரோஹித் ஷர்மாவின் தலைமை பண்பும், கேப்டன்சியும் உண்மையிலேயே முதிர்ச்சியடைந்து சரியான நேரத்தில் உச்சத்தை எட்டியிருக்கிறது.
தோனி மற்றும் விராட் கோலிக்கு பின் இந்திய அணியின் கேப்டனாக இருப்பது மிகவும் கடினமான வேலை. சிலர் ரோஹித் ஷர்மாதான் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்க வேண்டுமா..? என்று கேட்டனர். ஆனால், அவர் ஒரு தலைவராக மிகச் சிறப்பாக முதிர்ச்சி அடைந்திருக்கிறார் என நான் நினைக்கிறேன். உதாரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது முகமது சிராஜ் அதிக பவுண்டரிகள் கொடுத்து வந்தார்.
ஆனாலும், அவரை நம்பி மீண்டும் ஓவர் கொடுத்தார் ரோஹித் ஷர்மா. அப்போது சிராஜ் விக்கெட் வீழ்த்தி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அது போன்ற சிறிய முடிவுகளில் ரோஹித் ஷர்மா முதிர்ச்சியுடன் இருக்கிறார்" என ரோஹித் ஷர்மாவை பாராட்டியுள்ளார் ஆடம் கில்கிறிஸ்ட்.