காவிரி கரையான தர்மபுரியில் பிறந்த பிரபலங்களை குறித்து தெரியுமா.?
தர்மபுரியில் பிறந்து தரணியில் புகழ்பெற்று விளங்கும் பிரபலங்களை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
ஜிஏ வடிவேலு
1925-ஆம் ஆண்டு தர்மபுரியில் பிறந்த ஜிஏ வடிவேலு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். தேசிய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக, தனது 15 வயதில் காங்கிரஸில் சேர்ந்தார். 1940-களில் தனிநபர் சத்தியாகிரகம் மேற்கொண்ட வடிவேலு 1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
நாட்டின் முக்கிய தலைவர்களான மகாத்மா காந்தி, ஜெயப்பிரகாஷ் நாராயண், ராஜாஜி காமராஜ் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளியாகவும் அறியப்பட்டார். சுதந்திர போராட்டத்திற்கு பிறகு, ஜெயப்பிரகாஷ் 1948 இல் காங்கிரஸில் இருந்து வெளியேறி, சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கிய நிலையில், வடிவேலு அவரைப் பின்தொடர்ந்து அக்கட்சியில் இணைத்தார். 54 ஆண்டுகளுக்குப் பிறகு 2002ல் மீண்டும் காங்கிரஸில் இணைந்த இவர் 90-வது வயதில் 2016-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
கே பி அன்பழகன்
தர்மபுரியில் பாலக்கோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து 5-தாவது முறையாக இருந்து வரும் கே பி அன்பழகன் தருமபுரி மாவட்டத்தில் கடந்த 1958-ஆம் ஆண்டு பிறந்தார். 1996 ஆம் ஆண்டில் முழுநேர அரசியலில் ஈடுபட துவங்கிய அவர், அதே ஆண்டில் அதிமுக கட்சியில் சேர்ந்தார்.
தர்மபுரி மாவட்டச் செயலாளராக, தமிழ்நாடு அரசாங்கத்தின் உயர்கல்வி அமைச்சராக, 2009-2011 இல் மாநிலத்தின் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் அமைச்சராக போன்ற பல பதவிகளை வகுத்துள்ளார். 2021-ஆம் ஆண்டில் பாலக்கோடு தொகுதியில் போட்டியிட்ட அவர் 1,10, 070 வாக்குகளை பெற்று தற்போது தொடர்ந்து 5-தாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
ஜி.திலகவதி
தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனராக பணிபுரிந்த ஜி.திலகவதி பிறந்த மாவட்டம் தருமபுரி தான். 1951-இல் பிறந்த இவர், வேலூர் ஆக்சீலியம் கல்லூரியில் பொருளாதாரத்தில் கலை இளவர் பட்டம் பெற்ற பிறகு சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் கலை முதுவர் பட்டமும் பெற்றார்.
பின்னர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற திலகவதி, தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானார். 1976 ஆம் ஆண்டில் தமிழகக் காவல்துறையில் பணியில் சேர்ந்த திலகவதி, 34 ஆண்டுகள் அத்துறையில் பல்வேறு பிரிவுகளில் பதவிகளை வகித்துள்ளார். காவல் துறை அதிகாரி என்பதை தாண்டி, தமிழ் எழுத்தாளராகவும் அறியப்பட்ட இவர், 2001ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.
எஸ் செந்தில்குமார்
தர்மபுரியின் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செந்தில் குமாரின் சொந்த மாவட்டமும் இதே மாவட்டமாகும். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராம்தாஸ்'ஸை எதிர்த்து கடந்த 2019-ஆம் ஆண்டு தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார், ராமதாஸ்'ஸை விட 63,301 வாக்குகள் அதிகமாக பெற்று நாடாளுமன்றத்திற்கு தேர்வாகி இருக்கின்றார்.
அரசியல்வாதியாக இருப்பினும் மருத்துவ படிப்பை முடித்து மருத்துவராக பணிபுரிந்து வந்த எஸ்.செந்தில் குமார், தருமபுரி மாவட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்த டி. என். வடிவேலுவின் பேரனாவார்.
உதயகுமார் (கன்னட நடிகர்)
நடன சாம்ராட், கலா கேசரி என பல பட்டங்களை கொண்ட கன்னடத் திரையுலகின் முக்கிய நடிகராக விளங்கிய உதயகுமார் பிறந்த மாவட்டம் தர்மபுரி ஆகும். 29 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றிய இவர்,153 கன்னடத் திரைப்படங்களிலும், 15 தெலுங்கு திரைப்படங்களிலும், 6 தமிழ்த் திரைப்படங்களிலும் ஒரு இந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
உதயகுமார் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களான கல்யாண் குமார் மற்றும் ராஜ்குமார் ஆகியோருடன் சேர்ந்து, கன்னட சினிமாவின் குமாரத்ராயரு என்று அழைக்கப்பட்டார்.
துவக்கத்தில் நாயகனாக நடித்து பிரபலமடைந்தை உதயகுமார், பின்னர் மிகவும் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் ராஜ்குமாருக்கு முக்கிய வில்லன் நடிகராக விளங்கினார்.