விளம்பரத்தில் பிரபல நடிகர் ரூ.100 கோடியை சுருட்டிய நகைக்கடை - கதறும் முதலீட்டார்கள்!
சீட்டு கட்டிய வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நகைக் கடை மூடல்
திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் பிரபல ஜுவல்லரி கடை இயங்கி வந்தது. இங்கு சேதாரம், செய்கூலி இல்லை என நடிகர் பிரகாஷ்ராஜ் விளம்பரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து, மாதாந்திர சேமிப்பு மற்றும் தங்கத்தின் மீது முதலீடு என பலரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்திருந்தனர். முதலீடு செய்பவர்களுக்கு பரிசுகளும், கூடுதல் வட்டிக்கு தங்கம் என அள்ளிக் கொடுத்து பல கோடிகளை வசூலித்துள்ளனர்.
பதட்டத்தில் மக்கள்
ஒரு வருடம் முழுமையாக முதலீட்டாளர்களுக்கு தங்கத்தினை கொடுத்தவர்கள் சில மாதங்களாக தங்கத்தை கொடுக்கவில்லை, வட்டிக்கான காசோலைகளும் வங்கியில் இருந்து திரும்பி வந்திருக்கின்றன எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், முதலீடு செய்தவர்கள் கடைக்குச் சென்று கட்டியத் தொகையை கேட்டுள்ளனர். அதற்கு சமாளித்து அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், கடையை இழுத்து மூடிவிட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் ஜுவல்லரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து மக்கள் கலைந்துச் சென்றனர்.
இந்த நகை கடையில் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ள நிலையில் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்று இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.