அதை சொல்ல உதயநிதிக்கு தகுதி இல்லை.. தனது முதுகை திரும்பி பார்க்கவும் - ஜெயக்குமார் தாக்கு!
பணம் கொடுத்து கூட்டணி அமைக்கும் அவசியம் அதிமுகவுக்கு இல்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்தார். போலீஸ் கமிஷனர் அருணை சந்தித்து பேசினார். பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவஞ்சலி நிகழ்ச்சி டிசம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான அனுமதியும், பாதுகாப்பும் கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தோம். அவரும் உரிய ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார். அதிமுக மிகப்பெரிய ஜனநாயக கட்சி. இவ்வளவு பெரிய கட்சியில் கள ஆய்வு நடக்கும்போது ஒருசில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்.
உதயநிதிக்கு..
அது சகோதரர்களுக்கு இடையே நடக்கும் மோதல் சம்பவம். சரியாகிவிடும். அதை துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சிப்பதற்கு தகுதி இல்லை. அவர்களது கட்சியிலும் இதுபோல சம்பவங்கள் நடந்துள்ளது. தனது முதுகை அவர் திரும்பி பார்க்க வேண்டும்.
பணம் கொடுத்து கூட்டணி அமைக்கும் அவசியம் அ.தி.மு.க.வுக்கு இல்லை. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் அ.தி.மு.க. பொதுக்குழு மூலம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். இவர்களை தவிர்த்து வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். என்று தெரிவித்துள்ளார்.