ஒரு மாநிலத்தின் பெயரை சொல்லவில்லை என்றாலும் நிதி ஒதுக்கப்படும் - நிர்மலா சீதாராமன்!
ஒரு மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் நிதி ஒதுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் உரை மீதான விவாதங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளித்த அவர், “இந்த பட்ஜெட்டில் பல மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றும்,
எனவே அந்த மாநிலங்களை அரசு புறக்கணித்துவிட்டது என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.நான் 2004-5-ல் இருந்து பட்ஜெட் குறிப்புகளை எடுத்து வந்திருக்கிறேன். 2004-5-ல் பட்ஜெட் உரையில் 17 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
2006-07-ல் 16 மாநிலங்களின் பெயர்கள் இல்லை. 2009-ல் 26 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அப்படியானால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்த அந்த காலங்களில் அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லையா? இந்தக் கேள்வியை ஐ.மு. கூட்டணி அரசிடம் நான் கேட்க விரும்புகிறேன்.
ஒரு மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த மாநிலத்துக்கு நிதி ஒதுக்கப்படும் என்பது அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியும் என்பதை நான் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விஷயத்தில் எதிர்க்கட்சிகள் மேற்கொண்டது ஒரு தவறான பிரச்சாரம்.
நிதி ஒதுக்கப்படும்..
அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய விரும்பினால் தரவுகளைக் கொண்டு செய்யுங்கள். கடந்த சில ஆண்டுகளாக அமைச்சர்கள் பலரும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று, ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கியுள்ளோம். எனவே மக்களுக்குத் தெரியும்.
சமூக நலத் துறைக்கான திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் எம்எஸ்எம்இ (MSME)-க்கு எதுவும் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2013-2014-ல் ரூ. 21,934 கோடியாக இருந்தது.
2024-2025-ல் அது ரூ.1.23 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது ஐந்து மடங்கு அதிகரிப்பு. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் பிஎம் கிசான் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 11 கோடி விவசாயிகளுக்கு ரூ.3.2 லட்சம் கோடிக்கு மேல் நிதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து சமூக நலத் துறைகளுக்கும் பட்ஜெட்டில் கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது” என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.