கேம் விளையாட முடியாததால் சிறுவன் செய்த செயல் - 100க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்து தேடிய போலீசார்
செல்போனில் கேம் விளையாட முடியாத விரக்தியில் சிறுவன் 2000 கிமீ பயணம் செய்துள்ளார்.
வீடியோ கேம்
ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டம் சோனாரி கிராமத்தை சேர்ந்த மோகன்லாலின் 16 வயது மகன் ஓம் பிரகாஷ் அங்குள்ள பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இவர் Free Fire என்னும் வீடியோ கேம்க்கு அடிமையாகி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளதால் அவரது பெற்றோர் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சிறுவன் அந்த பழக்கத்தில் இருந்து மீளவில்லை.
மாயமான சிறுவன்
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர் போனை பிடுங்கி வீசியதில் போன் பழுதடைந்துள்ளது. இதனால் கேம் விளையாட முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுவன், அதிகாலை 6 மணிக்கு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு கிளம்பியுள்ளார்.
சிறுவன் காணாமல் போனது தெரிந்த சிறுவனின் உறவினர்கள், இது குறித்து கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தமிழக காவல் துறையினர், பிற மாநில காவல்துறையினரின் உதவியுடன், 10 நாட்களாக, நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சிறுவனை உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாமியார் ஒருவரின் ஆசிரமத்தில் இருந்து மீட்டு அழைத்து வந்துள்ளனர்.
30 கிமீ நடை
அதிகாலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், சேலம் மாவட்டம் சங்ககிரி வரை 30 கிமீ தொலைவிற்கு நடந்தே சென்றுள்ளார். அங்கு தனது பழுதான செல்போனை ரூ.1000 க்கு விற்பனை செய்து அந்த பணத்தில் பேருந்து மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து உத்தரப்பிரதேசத்திற்கு ரயிலில் சென்று சாமியாரின் ஆசிரமத்தை அடைந்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் உத்தரப்பிரதேச சாமியாரின் வீடியோவை அடிக்கடி பார்த்துள்ளதால் கேம் விளையாட முடியாத நிலையில் அங்கு சென்றுள்ளார். வீடியோ கேம் விளையாட முடியாததால் 16 வயது சிறுவன் 2000 கிமீ சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.