அதிமுக நாட்டிற்கான கட்சி - திமுக வீட்டிற்கான கட்சி - எடப்பாடி பழனிசாமி காட்டம்
மக்களவை தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
எடப்பாடி பிரச்சாரம்
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது வருமாறு,
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என பேரறிஞர் அண்ணா சொன்னது போல, அதிமுக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் தொடர்ந்து கூறுவதை போல அதிமுக மூன்றாக பிரிந்து விட்டது என்பது ஒரு போதும் நடக்காது.
அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி போன்ற தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்துவர்கள். ஆனால் குடும்பத்திற்காக வாழும் தலைவர்கள் யார் என்று உங்களுக்கே தெரியும்.
திமுக ஆட்சி வந்தாலே..
தனது குடும்பம், தனது வீட்டு மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி. தேர்தல் அறிக்கையில் நெசவாளர்களுக்கு பாஜக எந்தவித அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. திமுக ஆட்சி வந்தாலே மின் கட்டணம் உயரும். கோடை காலங்களில் மின் வெட்டு அதிகரிக்கும்.விலைவாசி உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அதிகளவில் கொலை,கொள்ளை,பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. போதை பொருள் விற்பனையும் அமோகமாக நடிப்பெறுகிறது.
ஆனால் இதனை இந்த திமுக ஆட்சி கட்டுப்படுத்த தவறிவிட்டது. கண்ணுக்கு தெரியாத காற்றில்(2ஜி) 1 லட்சம் கோடி ஊழல் வழக்கு மீண்டும் தூசி துடைக்கப்பட்டு நீதிமன்றத்தில் வந்துள்ளது. மத்தியில் ஆட்சியில் வந்தால் தான் ஊழலில் இருந்த தப்பிக்க முடியும் என ஸ்டாலின் துடிக்கிறார்.