மிரட்டும் திமுகவினர் - மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தினால் சும்மா விட மாட்டேன் - இபிஎஸ் திட்டவட்டம்
சேலம் தொகுதி அதிமுக நிர்வாககளிடம் கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவுரைகளை வழங்கினார்.
இபிஎஸ் பிரச்சாரம்
மத்திய பாஜக - மாநில திமுக ஆகிய கட்சிகளை தீவிரமாக எதிர்த்து அதிமுக இந்த தேர்தலை சந்திக்கிறது. அதிமுக நேரடியாக 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் என பலரும் தீவிர பிரச்சார களத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது அதிமுக கோட்டை
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரப்பம்பாளையத்தில் அதிமுக தேர்தல் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றினார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அவர் பேசியது வருமாறு, திமுக'வின் மெத்தன போக்கால் தமிழகத்தில் நெசவு தொழில் முடங்கி தறிகள் பழைய இரும்பு கடைக்கு செல்லும் சூழ்நிலை உருவாகி விட்டது என குற்றம்சாட்டி, விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கில் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை திமுக நிறுத்தியுள்ளதாக சாடினார்.
சும்மா விடமாட்டேன்
திமுக ஆட்சி மீது இருக்கும் வெறுப்பின் காரணமாக அதிமுக ஆதரவு அலை வீசுவதாக குறிப்பிட்ட அவர், அதிமுகவில் இருந்து சென்றவர்களே கோவை, சேலம் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினார்.
சேலம் எடப்பாடி அதிமுகவின் கோட்டை இங்கு வேறு யாராலும் வெற்றி பெற முடியாது என உறுதிபட தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தினமும் தி.மு.க.வினர் ஊர் ஊராக சென்று சுவர்களில் விளம்பரம் செய்கிறார்கள்,
அதனை தடுத்தால் 1000 ரூபாய் வழங்குவதை நிறுத்துவதாக மிரட்டுகிறார்கள் என்று கூறி, 1000 ரூபாய் கொடுப்பதை நிறுத்தினால் இதை நான் சட்டமன்றத்தில் விடமாட்டேன். இதற்கு துணை போகும் அதிகாரிகள் சஸ்பெண்டு, பணி நீக்கத்துக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கை செய்தார்.