திமுக, பாஜகவை.. அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம் - எடப்பாடி உத்தரவு!
2026 தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.
அப்போது மாவட்டம் தோறும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அதிக அளவில் இளைஞர்களைக் கட்சிக்குள் சேர்ப்பது, அவர்களுக்குப் பொறுப்புகள் வழங்குவது, தற்போது அதிமுக மீதான மக்களின் மனநிலை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் 2026 தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதற்காக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்த தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக விரைவில் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
தற்பொழுது தமிழகத்தில் அரசியல் களம் மாறி வருகிறது. இதனால் தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இதனைக் கருத்தில் கொண்டு திமுக, பாஜக தான் நமக்குப் பிரதான எதிரிகள். அதிமுக குறித்து திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விமர்சிக்காத வரை,
அவர்களை அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம். கடுமையான விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.