ஊழல் மட்டுமே செய்ததால் திமுக அமைச்சர்கள் அச்சத்தில் உள்ளனர் - எடப்பாடி பழனிசாமி!!
இரண்டாண்டு கால ஆட்சியில் திமுக அமைச்சர்கள் ஊழல் செய்திருப்பதால் அச்சத்தில் உள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திறமையில்லாத அமைச்சர்
கோவையில் இருந்து இன்று சேலம் வந்தடைந்த தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் அதிகளவில் காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது தான் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் வாடிக்கையாகிவிட்டது என்று விமர்சனம் செய்தார்.
திறமையில்லாத முதிர்ச்சியில்லாத ஒருவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருப்பது வேதனையாக உள்ளது என்று தெரிவித்து, இலவச பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் பல்வேறு விளக்கங்களை கேட்கிறார்கள்என்று சுட்டிக்காட்டி, அது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.
அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்துவிட்டு பிங்க் நிற பேருந்துகளில் மட்டுமே இலவச பயணம் செய்ய அனுமதித்துள்ள திராவிட மாடல் ஆட்சியல்ல, தந்திர மாடல் ஆட்சி என்று தனது விமர்சனத்தை முன்வைத்த எடப்பாடி பழனிசாமி, பொங்கல் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது நிலையில், இனி பொங்கல் தொகுப்பு கொடுக்கும் போது முறையான பொங்கல் தொகுப்பை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அமைச்சர்கள் அச்சத்தில் உள்ளனர்
தொடர்ந்து, டெல்டா காரன் என்ற முதல்வர் ஸ்டாலின் பேசியபடி டெல்டா விவசாயிகளுக்கு உரிய தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள், 1.5 லட்சம் ஏக்கர் மட்டும் தான் விளைச்சல் பெற முடிந்தது என்று கூறி, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்வர் ஸ்டாலின் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் பெற்று தர தவறவிட்டுவிட்டார் என்று விமர்சித்தார்.
இரண்டாண்டு கால திமுக ஆட்சியில் திமுக அமைச்சர்கள் தினமும் காய்சலோடு தான் எழுந்திருக்கிறார்கள் என்ற அவர், ஊழல் செய்திருக்கிறார்கள் அதனால் அச்சத்தில் உள்ளனர் என்றும் இதனை முன்னாள் நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார் என்று கூறி, அதனை கூட இன்னும் முழுமையாக விசாரிக்கவில்லை என தெரிவித்தார்.