எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்? மு.க. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடியார்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக இன்று மாநிலத்தின் எதிர்க்கட்சியான அதிமுக பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
எடப்பாடி செய்தியாளர் சந்திப்பு
உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுசெய்யும் போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியது வருமாறு, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருக்கு நன்றி.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பல உயிர்களை இழந்து விட்டோம். நகரின் மையப்பகுதியிலேயே விற்பனை நடந்துள்ளது. இது குறித்து பேச வாய்ப்பு கேட்டபோது சபாநாயகர் அனுமதி தரவில்லை. எங்களை வெளியேறிவிட்டு 15 நிமிடங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
ஆட்சியர், திமுக எம்.எல்.ஏ இருவரும் வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள். எனக்கு சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு அளித்திருந்தால் கிழி கிழி'என கிழித்திருப்பேன்.
அவியலா?
ஆனால் வாய்ப்பு தர மறுக்கிறார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நாங்கள் அறவழியில் போராடுகிறோம்.திராவிட மாடல் ஆட்சியால் கள்ளக்குறிச்சியே கண்ணீரில் மிதிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்து கூட இல்லை. நாடாளுமன்றத்தில் வென்றுவிட்டதால், அதிமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என பேசுகிறார் ஸ்டாலின். 2014'இல் அவர்கள் எங்கு இருந்தார்கள். சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும். என்பதை ஸ்டாலின் தான் கூறினார். இவ்வாறு அவர் பேசினார்.