அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க எடப்பாடி பழனிசாமி திட்டம் - தனியரசு பரபரப்பு பேட்டி
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் தலைவர் தனியரசு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார்.
தனியரசு பேட்டி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “என்னுடைய ஆதரவு ஓபிஎஸ்-க்குதான். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல சோதனைகளை சந்தித்தது. இரட்டை தலைமை இறுதி ஆன பிறகு, தனக்கான நிலைகளை எல்லாம் விட்டு கொடுத்து அதிமுக கட்சி செயல்பட துணை நின்றவர் ஓபிஎஸ்.
சுயநலம் இல்லாமல் செயல்பட்டவர் ஓபிஎஸ். கட்சியை நம்பி ஒப்படைத்த சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி தற்போது ஓபிஎஸ் அவர்களையும் நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அனைத்து இடங்களையும் விட்டு கொடுத்த ஓபிஎஸ் இந்த நேரத்தில் விட்டு கொடுக்கக் கூடாது என அவரிடம் தெரிவித்துள்ளேன்.
இரட்டை தலைமை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது பொதுக்குழுவில் ஒற்றை தலைமை என்ற பெயரில் ஓபிஎஸ் அவர்களை நீக்க முயற்சி செய்கின்றனர்.
கட்சியை விட்டு நீக்கிய சசிகலா, தினகரன் போன்றவர்களை இணைக்க வேண்டும் என நாங்கள் தெரிவித்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தற்போது இதுபோன்று செயல்படுகிறார்.
எனவே இந்த முறை விட்டுக் கொடுக்கக் கூடாது என தெரிவித்தேன். அவரும் இந்த விஷயத்தில் விட்டு கொடுக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சசிகலா, தினகரன், அன்வர் ராஜா போன்றவர்களை நான் சந்திக்கவுள்ளேன். ஒற்றை தலைமை வந்தாலும் ஓபிஎஸ் தான் தலைமை இடத்திற்கு வர வேண்டும். பகைவரை கூட மன்னித்து அரவணைத்து செயல்பட கூடியவர் ஓபிஎஸ்” என அவர் தெரிவித்தார்.