ஈபிஎஸ்-ஐ தட்டிக் கொடுத்த மோடி , ஓபிஎஸ் உடன் தனியாக மீட்டிங் : முடிவுக்கு வந்ததா உட்கட்சி பஞ்சாயத்து ?
எடப்பாடி பழனிச்சாமி உடனான சந்திப்புக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி சென்னையில் நேற்று நடந்த அரசு விழாவில் ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். நிறைவேற்றப்பட்ட 5 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிதாக 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார்.
நேரு விளையாட்டு அரங்கில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு முடிந்த பிறகு பிரதமர் மோடி காரில் சென்னை விமான நிலையம் சென்றார். விமான நிலையத்தில் மோடியை சந்திக்க 30 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கி வழி அனுப்பினார். அதன்பிறகு அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் அறையில் அ.தி.மு.க. தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகிய 5 பேரும் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தமிழக பாஜக- ம் உள்ளதால் அரசியல் ரீதியாக இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதில் வர இருக்கும் 2024-ம் ஆண்டு வரப்போகும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இப்போதே பணியாற்ற வேண்டும்.
இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. கட்சியில் அதாவது தலைமையில் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பது சரிவினை சந்திக்கும் அது கூட்டணி கட்சியான பாஜக - ஐ பாதிக்கும் என்பதை பிரதமர் மோடி கூறியதாக கூறப்படுகிறது .
மேலும் ஒபிஎஸ் இபிஎஸ் தொண்டர்களிடையே கடந்த சில காலமாகவே குழப்பம் நிலவி வருகிறது .
ஆகவே உங்களுக்குள் இருக்கும் பிரசினைகளை பேசி தீருங்கள் இருவரும் இணைந்து செயல்பட்டுங்கள் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
பிரதமருடனான இந்த ஆலோசனையில் சசிகலா குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது . அதற்கு மோடி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்தது.
அந்த 10 நிமிடமும் அ.தி.மு.க. தலைவர்களை சமரசம் செய்வதில் பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது.
சென்னை வந்தவுடன் விமான நிலையத்தில் வரவேற்க சென்ற எடப்பாடி பழனிசாமியிடம், எப்படி இருக்கீங்க என்று உரிமையுடன் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்த பிறகு அ.தி.மு.க. தலைவர்களுடன் நட்பு பாராட்டியதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதே சமயம் இன்னும் 10 வருடங்களை கடந்து பாஜக இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் என தேர்தல் வியூகர் பிரசாந் கிஷோர் கூறியுள்ள நிலையில் தமிழகத்தில் பாஜக - ஐ இன்னும் வலுவாக்கவே பிரதமரின் இந்த சந்திப்பு என கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.