கட்சி நிர்வாகிகளுக்கு விசுவாசமே இல்லை - கட்சி கூட்டத்தில் வெளிப்படையாக இபிஎஸ் அதிருப்தி
அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு விசுவாசமே இல்லை என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியை நிறைவு செய்தது. ஆனால், ஆட்சி பறிபோனதும் கட்சி பெரும் சவால்களை சந்தித்து வருகின்றது.
ஓபிஎஸ் - இபிஎஸ் - சசிகலா - டிடிவி தினகரன் என அணிகளாக கட்சி உடைந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையத்திலிருந்து சின்னத்தையும் பெற்றார்.
கட்சி தற்போது நெருக்கடியில் இருக்கும் சூழலில், கட்சியை பெரும் சக்தியாக மீண்டும் மாற்ற எடப்பாடி பழனிசாமி பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி புதிய கூட்டணியை உண்டாக்கி, நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்தித்துள்ள அதிமுக தேர்தல் முடிவுக்காக காத்துள்ளது.
எடப்பாடி அதிருப்தி
இந்த சூழலில் தான், இன்று கட்சியின் தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில், கலந்து கொண்ட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியை நிர்வாகிகளிடம் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மாவட்டச் செயலாளர்கள், சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர்கள் பங்கேற்ற நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள கட்சி தலைமைக்கு நிர்வாகிகளிடம் விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது என எடப்பாடி வருத்தம் தெரிவித்தாக தகவல் வெளிவந்துள்ளது.
அதே போல, பல நிர்வாகிகள் நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை என்றும் திமுக ஆட்சியில் உயர்ந்துள்ள சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம், பால் கட்டணம் போன்றவற்றையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதிமுக நிர்வாகிகள் தரப்பில் போதுமான அளவுக்கு பிரச்சாரம் திருப்திகரமாக நடைபெறவில்லை எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக கூறும் நிலையில், நிர்வாகிகளின் செயல்பாடுகளில் தனக்கு பெரிய அளவில் திருப்தி இல்லை என்று வெளிப்படையாகவே எடப்பாடி அதிருப்தியை தெரிவித்ததாக கூறப்படுகிறது.