லஞ்ச ஒழிப்பு சோதனை.. விடியா அரசின் ஏவல் வேலை இது - இபிஎஸ் கண்டனம்

Tamil nadu AIADMK Edappadi K. Palaniswami
By Sumathi Sep 13, 2022 07:27 AM GMT
Report

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடத்தும் லஞ்ச ஒழிப்பு சோதனை என்பது திமுகவின் ஏவல் வேலை என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு சோதனை

அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான 39 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்பு சோதனை.. விடியா அரசின் ஏவல் வேலை இது - இபிஎஸ் கண்டனம் | Eps Condemns Repeated Anti Bribery Raid

இதற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் எதிர்க்கட்சியினரின் குரல்களை நசுக்குதல் போன்ற தீய செயல்களில் திமுக அரசினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இபிஎஸ் கண்டனம்

பெண்களுக்கு எதிராக உரிமைத் தொகையினை வழங்காதது முதல் மாணவர்களின் கல்விக் கட்டணம் ரத்து வரை எந்த உறுதி மொழியையும் நிறைவேற்றாத விடியாத திமுக அரசு, முதலில் வீட்டு வரியினை கடுமையாக உயர்த்தியது. தற்போது மின்கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. பெண்களுக்கான தாலிக்கு தங்கம்,

லஞ்ச ஒழிப்பு சோதனை.. விடியா அரசின் ஏவல் வேலை இது - இபிஎஸ் கண்டனம் | Eps Condemns Repeated Anti Bribery Raid

மகளிர் இருசக்கர வாகனம் உள்ளிட்ட எண்ணற்ற நல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தியுள்ளது இந்த மக்கள் விரோத அரசு. இதனால் கொதித்து போயுள்ள மக்களின் துயர் துடைக்க வரும் 16ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.

ஒரு நாடகம்

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் 3வது முறையாக ரெய்டு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்த இந்த விடியா அரசின் முதலமைச்சர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் தனது கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையை ஏவல் துறையாக ஏவி விட்டுள்ளார்.

ஏற்கனவே 2 முறை சோதனை நடத்தியுள்ள நிலையில் 3வது முறையாக சோதனை செய்வது வேடிக்கையாக உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த விடியா திமுக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை குட்டு வாங்கி வருகிறது.

எங்கள் மடியில் கனமில்லை

திராவிட அரசு நேர்மையான அரசு என்று தங்களை தானே பாராட்டிக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் 2 நாட்களுக்கு முன்பு குட்டுபட்டுள்ள திமுக அமைச்சரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து விடுவித்து, வழக்கை விரைந்து நடத்தத் தயாரா? தற்போது தமிழகமெங்கும் நில அபகரிப்பு செய்யும் தனக்கு வேண்டிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரா? எனவே

எதிர்கட்சிகள் மீது பொய்ப் புகார் புனைந்து காவல்துறை மூலம் பழிவாங்கும் போக்கை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களுக்கு இனியாவது நல்லது செய்வது பற்றி சிந்திக்க வேண்டும். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப்போராடி வெல்வோம். எங்கள் மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை.

திமுக அமைச்சர்களை போல் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்க பார்க்கமாட்டோம். காவல் துறையினர் நடுநிலைமையோடு, ஆளுங்கட்சியின் அடாவடிதனத்திற்கு அடிபணியாமல் சட்டத்தின்படி நீதி நேர்மையோடு பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.