தமிழ்நாடு பட்ஜெட் - கடன் வாங்குவதில் நம்பர் 1 தமிழ்நாடு தான் தெரியுமா? ஈபிஎஸ் விமர்சனம்!
தமிழ்நாடு நிதிநிலை பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட்
2024-25-ம் ஆண்டிற்கான நிதிநிலை பட்ஜெட்டை இன்று தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
சுமார் 2 மணி நேரம் நெருங்கி திட்டங்களை அறிவித்த தங்கம் தென்னரசு, நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2500 கோடி வரை ஒதுக்கீடு செய்து அறிவுப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டுள்ளார். இபிஎஸ் விமர்சனம் சட்டமன்ற நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி "விடியா திமுக அரசு 4வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது.
இதில் வார்த்தை ஜாலங்கள்தான் அதிகமாக உள்ளது. மக்கள் திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் இடம்பெறவில்லை. பசுமை வீடுகட்டும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. கிராமபுற சாலைகளை சீர் செய்ய வெறும் 1000 கோடி ரூபாய்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடன் உயர்ந்துள்ளது
அரசின் நிதி பற்றாக்குறை ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி என சொல்லப்பட்டுள்ளது. விடியா திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடி ரூபாய் கடன் உள்ளது. 2021ஆம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடன் உயர்ந்துள்ளது.
கடனை சரி செய்ய ஒரு குழு அமைத்தார்கள். இப்போது அந்த குழுவை அமைக்க ஒரு குழு போட வேண்டி உள்ளது. இந்த பட்ஜெட்டில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், ’இது ஒரு கானல் நீர்; மக்களுக்கு பலன் தராது’ ஆட்சிக்கு வருவதற்கு முன் அதிமுக அரசு கடன் வாங்கி அதிக சுமை தந்துவிட்டது என கூறினார்கள். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
அதிமுக ஆட்சியை விட தமிழ்நாடு அரசுக்கு அதிக வருமானம் வருகிறது. ஆனால் எந்த பெரிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை. எல்லா நிதி நிலை அறிக்கையிலும் பேருந்து வாங்கப்படும் என்றுதான் சொல்வார்கள், இது காகிதத்தில்தான் இருக்கும், நடைமுறைக்கு வராது. நாங்கள் ஆட்சிக்கு வரும்போது மட்டும் பாஜக அரசு என்ன அள்ளிக்கொடுத்துவிட்டார்களா?
அப்போதும் இதே நிலைமைதான். அதிமுக ஆட்சியில் உயர்க்கல்வியில் 2035ஆம் ஆண்டில் அடைய வேண்டிய இலக்கை, 2019ஆம் ஆண்டிலேயே அடைந்துவிட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.