முதல்வரும் துணை முதல்வரும் பொய்யான தகவலை வெளியிடுகின்றனர் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அதிமுக பிரிந்து உள்ளது என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
அதிமுக 53வது ஆண்டு விழா
அதிமுகவின் 53ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (17.10.2024) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால்சென்னை உடன்பட பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை.
சென்னை மழை வெள்ளம்
குறைந்த அளவிலே மழை பொழிவு இருந்த இந்த காலகட்டத்தில் கூட சென்னையின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் தத்தளித்ததை தொலைக்காட்சிகளில் பார்த்தோம். ஆனால் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், ஏனைய அமைச்சர்களும் எங்கேயும் மழை தண்ணீர் தேங்கவில்லை என பொய்யான தகவலை வெளியிட்டு வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், சென்னையில் 20 செமீ மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் தேங்காது என முதலமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் பேசினார்கள். 2023 ஆம் ஆண்டு அதே கருத்தை சொன்னார்கள். இந்த முறைதான் சொல்லவில்லை. ஏனெனில் ஊடகங்கள் மழை தண்ணீர் தேங்கியதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்கள்.
ஒற்றுமையாக உள்ள அதிமுக
இன்றைக்கு உண்மை நிலை வெளியே வந்து விட்டது. அதிமுக ஆட்சியில் 1240 மீட்டர் நீளமுள்ள மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்து 80 மாதங்கள் ஆகியும் இந்த பணிகள் இன்னும் முடியவில்லை. அதிமுக ஆட்சியில் செய்தது போல் தூர்வாரும் பணிகளை தொடர்ந்து செய்திருந்தால் இன்றைக்கு தண்ணீர் தேங்கி இருக்காது.
அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். 6 முக்கிய தலைவர்கள் என்னிடம் வந்து, நீக்கப்பட்டவர்களை இணைக்கச் சொன்னார்கள் என்று சொல்வது பச்சைப் பொய்." என பேசினார்.