எம்ஜிஆரின் 'உலகம் சுற்றும் வாலிபனில்' எடப்பாடி பழனிசாமி - பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு!
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இயக்கி நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்தின் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள உள்ளார்.
உலகம் சுற்றும் வாலிபன்
திரைப்பட நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த திரைப்படம் தான் 'உலகம் சுற்றும் வாலிபன்'. கடந்த 1973ம் ஆண்டு இந்த படம் வெளியானது. இதில் மஞ்சுளா, லதா, சந்திரகலா, நம்பியார், மனோகர், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மேலும், தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ராத்தும் நடித்திருந்தார். பல அரசியல் சிக்கல்களை தாண்டி வெளிவந்த இத்திரைப்படம் அந்தக் காலத்தில் தியேட்டரில் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனைப் படைத்தது.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பச்சைக்கிளி முத்துச்சரம், உலகம் அழகு கலைகளின் சுரங்கம், நிலவு ஒரு பெண்ணாகி போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் மெகா ஹிட் அடித்தது.
பொன்விழா
இந்நிலையில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகளை நெருங்குகிறது. இதனால் வரும் நவம்பர் 5ம் தேதி இப்படத்தின் பொன்விழாவை கொண்டாட எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்தில் சிறப்பு விழா நடத்துகின்றனர்.
இந்த விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகை லதா, புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். மேலும், இதில் ஏராளமான எம்.ஜி.ஆர் ரசிகர்களும் கலந்துகொள்ள உள்ளனர். காலை 1 மணி முதல் இரவு வரை பொன்விழா நடக்கிறது.