திராவிட மாடல் அல்ல - தந்திர மாடல் அரசு இது..! இபிஸ் கடும் விமர்சனம்!!
கோவையில் உரையாற்றிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கச்சத்தீவு உரிமை இழக்க காரணம் திமுக அரசு தான் என்பதை காலம் மறக்காது என்றார்.
கோவையில் இபிஎஸ்
கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற்ற கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மாற்று கட்சியில் இருந்து பலரும் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் உரையாற்றிய இபிஎஸ், விவசாயி அவரின் இரண்டு மகன்களின் குட்டிக்கதை ஒன்றை கூறி, அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் நிலைமை அரசியலில் அதிகரித்துவிட்டது எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தலுக்காக தலையில் பச்சை துண்டைக் கட்டிக் கொண்டு விவசாயி என்று தொட்டதுக்கு எல்லாம் போராட்டம் நடத்திய ஸ்டாலின், தற்போது செய்யூரில் அறவழியில் போராடும் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து, கொடுங்கோல் முதலமைச்சராக மாறி விட்டார் என விமர்சனம் செய்தார்.
பசுந்தோல் போர்த்திய புலி
தந்திரமாக திமுக சிறுபான்மை மக்களை ஏமாற்றி வருகிறது என்று சாடிய அவர், இரண்டரை ஆண்டுகளில் என்ன நன்மையை திமுக செய்துள்ளது என்பதை கிறிஸ்தவர்கள் எண்ணி பார்க்க வேண்டும் என்றார்.
கடந்த காலத்தில் பாஜக அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது என்பதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, ஆட்சி அதிகாரத்தில் இருந்தவரை பாஜக கொள்கைகள் திமுகவிற்கு தெரியாதா? என்றும் பதவி சுகம் வேண்டுமென கொள்கையை காற்றில் பறக்க விட்டார்கள் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மக்கள் திமுக பாஜக கூட்டணியில் இருந்ததை மறந்து விடுவார்கள் என பசுந்தோல் போர்த்திய புலியாக சிறுபான்மை மக்களை திமுக ஏமாற்ற பார்க்கிறார்கள் என்று விமர்சனம் செய்து, சிறுபான்மையின மக்கள் தற்போது விழித்து கொண்டார்கள் என்றும் இனி பிழைத்துக் கொள்வார்கள் என்றார்.
இது திராவிட மாடல் அரசு அல்ல
இது திராவிட மாடல் அரசு அல்ல - தந்திர மாடல் அரசு என்றும், கச்சத்தீவு உரிமை இழக்க காரணம் திமுக அரசு தான் என்பதை காலம் மறக்காது போன்றவற்றை மேற்கொள்ள காட்டி பேசிய எடப்பாடி பழனிசாமி, இனியும் கிறிஸ்துவ மக்கள் ஏமாறாமல் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
சிறுபான்மை மக்களின் கேடயமாகவும் - பாதுகாப்பு அரணாகவும் அதிமுக என்றென்றும் இருக்கும் என உறுதிபட தெரிவித்த அவர், அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் மக்கள் நலனை கருதும் முதன்மையான இயக்கமாக இருக்கும் என்றும், 2026 ல் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் அதற்கு அச்சாணியாக நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்ல கிறிஸ்தவர்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும் எனப் பேசினார்.