நாட்டிலேயே 3-வது பெரிய கட்சியாகும் திமுக! பரபரக்கவைக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள்
நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் பிரச்சாரம் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.
மக்களவை தேர்தல்
திமுக தலைமையிலான கூட்டணி,அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி என தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.
தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கியிருக்கும் சூழலில், தேர்தல் பிரச்சாரங்களை கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. பாஜக - காங்கிரஸ் தேசிய தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்டு சூறாவளி பிரச்சாரம் செய்கிறார்கள்.
யாருக்கு களம்..?
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இதில், தற்போது ஏபிபி நியூஸ் மற்றும் சி-வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் மாநில ஆளும் கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி 39 இடங்களையும் பெற வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
ஒரு இடத்தில் கூட தேசிய ஜனநாயக கூட்டணியோ அல்லது அதிமுக கூட்டணியோ வெற்றி பெறாது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுளள்து. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி போன்ற கூட்டணி கட்சிகள் 30 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களையும் வெல்லும் என இந்த கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது நடக்கும் பட்சத்தில் நாட்டிலேயே 3-வது பெரிய கட்சியாக திமுக மாறும் என்பதும் நிதர்சனமே. கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின் போதும், பாஜக 293 இடங்களையும், காங்கிரஸ் 30 இடங்களையும் பெற, 3-வது பெரிய கட்சியாக திமுக 20 இடங்களுடன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.