இந்த முறை தங்கம் வென்றதற்கு அனுபவம்தான் முக்கிய காரணம் - பிரக்ஞானந்தா 'நச்' பதில்!
சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப்பதக்கம் வெல்ல முடியாதது மிகவும் வருத்தமாக இருந்தது.
செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாகத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்றனர்.
இதில் இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 45வது செஸ் ஒலிம்பியாட் இறுதிச் சுற்றில் ஸ்லோவோனியாவை எதிர்த்து விளையாடிய இந்திய ஆடவர் அணி என்ற 3.5 -0.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 11 சுற்றுகள் கொண்ட போட்டியில் 21 புள்ளிகளைப் பெற்ற இந்தியா தங்கபதக்கததை உறுதி செய்தது. இதே போல் இந்திய மகளிர் அணியும் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் என இரண்டிலும் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஆடவர் அணியில் பங்கேற்ற பிரக்ஞானந்தா, மகளிர் அணியில் பங்கேற்ற வைஷாலி, இந்திய செஸ் ஒலிம்பியாட் அணியின் கேப்டன் ஸ்ரீநாத் ஆகிய மூவரும் விமானம் மூலம் நாடு திரும்பினர்.
பிரக்ஞானந்தா
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பிரக்ஞானந்தா கூறியதாவது : கடந்த முறை சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது மிகவும் நெருக்கத்தில் வந்து தங்கப்பதக்கம் வெல்ல முடியாதது மிகவும் வருத்தமாக இருந்தது.
ஆனால் இந்த முறை அதிக புள்ளிகள் உடன் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.விளையாடிய அனைத்து போட்டிகளும் கடுமையாகவே இருந்தது. தொடர்ந்து முதலிடத்தில் உள்ள அமெரிக்காவைத் தோற்கடித்ததும், நம் நாட்டிற்குத் தங்கப் பதக்கம் உறுதியாகிவிட்டது.
இந்த முறை தங்கம் வென்றதற்கு அனுபவம்தான் முக்கிய காரணம் என்று கூறினார் .மேலும் தங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.