ஆவினில் ஆங்கில பெயர்களா..?தமிங்கிலம் தான் திராவிட மாடலா? கொந்தளிக்கும் சீமான்!!
ஆவின் பால் பொருட்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்தி நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்ட வேண்டும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சீமான் அறிக்கை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்களுக்கு தரம் பிரித்தல் அடிப்படையில் ஆங்கிலப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்று கூறிவிட்டு அரசு நிறுவனத்திலேயே அன்னை தமிழ் மொழியை புறக்கணித்து, ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது என்பது வெட்கக்கேடானது.
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கீழ் இயங்கும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) கடந்த மார்ச் மாதம் ஆவின் உள்ளிட்ட அனைத்து மாநில அரசு நிறுவனங்களும் தாங்கள் தயாரிக்கும் தயிர் பொதிகளில் தயிர் என்பதற்கு பதிலாக தாஹி என இந்தியில் அச்சிடவேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தப்போது அதனைக் கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தாங்கள் நடத்தும் நிறுவனத்தில் ஆங்கிலத்தில் பெயரிடப்படுவதை அனுமதிப்பது எப்படி? இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் செயல்முறையா? தமிங்கிலத்தில் எழுதுவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?
தமிழ்மொழி அழிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளில் அன்னை தமிழ் மொழி வழிப்பாட்டு மொழியாகவும் இல்லை. வழக்காடு மொழியாகவும் இல்லை. பண்பாட்டு மொழியாகவும் இல்லை. பயன்பாட்டு மொழியாகவும் இல்லை. ஆட்சி மொழியாகவும் இல்லை. பேச்சு மொழியாகவும் இல்லை. தமிழ், தமிழர் எனக் கூறி ஆட்சி அதிகாரத்தை அடைந்த திராவிடக் கட்சிகள் ஆட்சி அதிகாரத்திலிருந்த காலங்களில் தான் தமிழ்மொழி முற்று முழுதாகச் சிதைத்து அழிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆகச் சிறந்த எடுத்துக்காட்டுதான் ஆவின் பால் பொருட்களில் அரைகுறை ஆங்கிலப் பெயர்களில் இடம்பெற்றுள்ளதுமாகும்.
ஆவின் பால் பொருட்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்தி நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்ட வேண்டும்!@CMOTamilnadu @mkstalin
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) October 28, 2023
தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்களுக்கு தரம் பிரித்தல் அடிப்படையில் ஆங்கிலப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது வன்மையான… pic.twitter.com/EbsqY5kX4H
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக ஆவின் பால் பொருட்களது நெகிழிப் பைகளின் மீது ஆங்கிலப் பெயர்கள் இடம்பெறுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தி அழகு தமிழில், தூய, நல்ல தமிழ்ப்பெயர்களை இடம்பெறச் செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.