இது அடுத்த தலைமுறை வீரர்களுக்கான நேரம் - கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த CSK வீரர்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்துள்ளார்.
மொயீன் அலி
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மொயீன் அலி ( 37). கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காக ஆடி வரும் இவர் 138 ஒருநாள் போட்டி, 68 டெஸ்ட் போட்டி மற்றும் 92 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார்.
2019 உலக கோப்பை மற்றும் 2022 T20 உலக கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தார். ஐபிஎல் போட்டிகளில் 2017 முதல் 2020 வரை பெங்களூர் அணிக்காக ஆடிய இவரை, 2021 ஆம் ஆண்டு சென்னை அணி 7 கோடிக்கு வாங்கியது.
ஓய்வு
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்காத சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய மொயீன் அலி, நான் இங்கிலாந்து அணிக்காக மீண்டும் விளையாட முயற்சி செய்யலாம். ஆனால், அதை நான் செய்ய மாட்டேன் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு தன்னை தயார் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து நான் இந்த முடிவை எடுக்கிறேன்.
இது அடுத்த தலைமுறை வீரர்களுக்கான நேரம். எனவே, இதுதான் சரியான நேரம் என நினைத்தேன். அதனால், எனது பங்கை அளிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்." என தெரிவித்தார்.