இனி ஆளுநர் உரை வேண்டாம் - சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடரைத் தொடங்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டசபை
தமிழ்நாட்டில் சட்டசபையின் கடைசி கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அடுத்த மாதம் இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்தவுடனேயே தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதைக் காரணமாகச் சொல்லி ஆளுநர் ரவி அவையில் இருந்து வெளியேறினார். ஆளுநர் உரையை வாசிக்காமலேயே அவர் வெளியேறினார்.
முதல்வர் முடிவு
தொடர்ந்து எழுந்த முதல்வர் ஸ்டாலின், மக்கள் மன்றத்தை ஆளுநர் அவமதிப்பதாகத் தெரிவித்தார். மேலும், ஆளுநர் உரை வாசிக்கப்பட்டதாகக் கருதப்படும் என கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடரைத் தொடங்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவர தனது கட்சி நடவடிக்கை எடுக்கும்.
இதற்காக, நாடு முழுவதும் ஒரே கொள்கையுடைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற திமுக தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.