இந்தியாவிற்கு வரும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் - கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்
இந்தியாவின் பாதுகாப்பு விதிகளை ஏற்றுள்ள ஸ்டார்லிங்க் நிறுவனம் விரைவில் இந்தியாவில் சாட்டிலைட் இணைய சேவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க்
உலக பணக்காரர்களில் ஒருவரும், Tesla , SpaceX , X(டிவிட்டர்) ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், Starlink என்னும் சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ஸ்டார்லிங்க் 100க்கு மேற்பட்ட நாடுகளில் சாட்டிலைட் மூலம் இணைய சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவிலும் இணையசேவை வழங்க அனுமதி கோரி கடந்த 2022 ஆம் ஆண்டே ஸ்டார்லிங்க் விண்ணப்பித்திருந்தது.
இந்தியாவில் ஸ்டார்லிங்க்
இந்நிலையில் ஸ்டார்லிங்கின் விண்ணப்பத்தின் நிலை குறித்து மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவிடம் கேள்வி எழுப்பிய போது, TRAI வழங்கும் பரிந்துரைகளைப் பொறுத்து தான் ஸ்டார்லிங்க் சேவைக்கு இந்தியாவில் சேவை அளிக்க அனுமதி அளிக்கப்படும்" என கூறினார்.
இந்நிலையில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்திற்கான உள்ளூர்மயமாக்கல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விதிகளை ஏற்க ஸ்டார்லிங்க் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஸ்டார்லிங்க் தங்கள் நிறுவன பயனர் தரவுகளை இந்தியாவிற்குள் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும். மேலும், விசாரணை அமைப்புகளுக்கு அது தேவைப்படும் போது வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ, ஏர்டெல்
இந்தியாவில் தற்போது வரை, பார்தி குழுமத்தின் ஒன்வெப் மற்றும் ஜியோ சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸின் ஜியோ-எஸ்இஎஸ் நிறுவனத்திற்கு மட்டும் சாட்டிலைட் இணைய சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங்கிற்கு அனுமதி கிடைத்தால் ஜியோ, ஏர்டெல் போன்ற இந்திய நிறுவனங்கள் ஸ்டார்லிங்க் போன்ற உலகளாவிய நிறுவனத்துடன் போட்டியிடும். மற்ற நிறுவனங்களை விட ஸ்டார்லிங்க் குறைந்த விலையில் அதிவேக இணைய சேவை வழங்கும் என கூறப்படுகிறது.
ஸ்டார்லிங்க் 6000 க்கும் மேற்பட்ட சாட்டிலைட்களை விண்ணில் ஏவியுள்ளது. உலகிலேயே அதிக செயற்கைகோள்கள் கொண்ட தனியார் நிறுவனம் என்ற சிறப்பை ஸ்பேஸ் எக்ஸ் பெற்றுள்ளது.