தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தலா? தேர்தல் ஆணையத்திடமிருந்து பறந்த உத்தரவு
வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வார்டு மறுவரையறை செய்யப்பட்ட பின், கடந்த 2021ம் ஆண்டு மீதமுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
முடிவடையும் பதவிக்காலம்
இந்நிலையில், முதலில் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தில் முடிவடைகிறது. மற்ற 9 மாவட்டங்களின் உள்ளாட்சி பிரதிநிதிகளுடைய பதவிக்காலம் 2026 ல் முடிவடைகிறது.
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில் அதற்கு முன்னதாகவே உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனையொட்டி வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணையம்
இது தொடர்பாக சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிர்வரும் சாதாரண / தற்செயல் தேர்தல்களை முன்னிட்டு தேர்தல்களுக்கு தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார் நிலையில் வைப்பது மிகவும் அவசியமாகிறது. இதில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும்.
எனவே ஊரக உள்ளாட்சித் தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வாக்குப்பெட்டிகள் தற்போதைய தரம் மற்றும் நிலையை, இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, பயன்படுத்தும் நிலையில் உள்ள வாக்குப்பெட்டிகள், பழுதடைந்த வாக்குப்பெட்டிகள் என தரம் பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். வாக்குப்பெட்டிகளில் உள்ள சிறு பழுதுகளை சரிசெய்ய வாக்குப் பெட்டி ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.21வழங்க பரிந்துரைத்துள்ளது என கூறப்பட்டுள்ளது.