கொலை,பாலியல் வழக்குகள்; தேர்தல் வேட்பாளர்களில் இத்தனை பேர் கிரிமினல்களா?
மக்களவை தேர்தலில் தல் கட்டமாக போட்டியிடும் 1618 வேட்பாளர்களில் 252 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது.
கிரிமினல் வேட்பாளர்கள்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக போட்டியிடும்1618 வேட்பாளர்களில் 252 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் 15 பேர் அந்த வழக்குகளுக்கு தண்டனையும் பெற்றுள்ளனர்.
இந்த தகவல் ’ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்’ மற்றும் ’தேசிய தேர்தல் கண்காணிப்பு’ ஆகிய அமைப்புகள் சேர்ந்து நடத்திய ஆய்வில் வெளியானது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நடைபெறும் இந்த தேர்தலில் வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
கொலை,பாலியல் வழக்குகள்
அதில், 161 வேட்பாளர்கள் மீது கடும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. 7 வேட்பாளர்கள் மீது கொலை வழக்குகள், 19 பேர் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடையவர்கள். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 18 வேட்பாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு ஆகியுள்ளது.
மேலும், 35 வேட்பாளர்கள் வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகளுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த வேட்பாளர்களில் சுமார் 28 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். சராசரியாக ஒரு வேட்பாளரின் சொத்து மதிப்பு என்பது ரூ.4.51 கோடியாக உள்ளது. காங்கிரஸின் நகுல்நாத் (ரூ.716 கோடி), அதிமுகவின் அசோக்குமார் (ரூ. 662 கோடி), பாஜகவின் தேவநாதன் யாதவ் (ரூ.304 கோடி) உள்ளிட்டோர் முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளனர்.