அரசியலை ஆட்டி படைக்கும் முட்டை பப்ஸ்..ரூ. 3.6 கோடிக்கு வாங்கிய பில் - சிக்கலில் ஜெகன்!
ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் ஒரு நாளைக்கு 993 முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.
முட்டை பப்ஸ்..
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்தபோது முதல்வர் அலுவலகத்துக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 993 முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டு வந்துள்ளது என்று தெலுங்கு தேசம் குற்றம்சாட்டியுள்ளது.
ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 2019 முதல் 2024 வரை ஆந்திரப் பிரதேசத்தை ஆட்சி செய்தது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலும் நடந்த நிலையில் என்.டி.ஏ கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது.
சிக்கலில் ஜெகன்
இந்த சூழலில், சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனது முதல் தன்னை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக ஜெகன் குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில், ஜெகன் மோகன் முதல்வராக இருந்த சமயத்தில் 2019 முதல் 2024 வரை முதல்வர் அலுவலகத்துக்காக ரூ.3.62 கோடிக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது,
அதாவது வருடத்துக்கு ரூ.72 லட்சதுக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது என்று தெலுங்குதேசம் கட்சி கூறியுள்ளது. மேலும், மக்கள் பணத்தை ஜெகன் எல்லாவகையிலும் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும்
முட்டையின் ஓடு உடைந்து குஞ்சு பொரிவது போல ஜெகன் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவருவதாகவும் தெலுங்கு தேசம் விமர்சித்துள்ளது.