கட்சி உறுப்பினரே இல்லாதவர் ஒருங்கிணைப்பாளரா..? நீதிமன்றத்தில் இபிஎஸ் பரபரப்பு புகார்
தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு வருவதற்க்கு தடை விதிக்கவேண்டும் என இபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.
ஓபிஎஸ் - இபிஎஸ்
அதிமுகவில் இன்னும் அதிகார மோதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. கட்சி, சின்னம் என அனைத்தும் இபிஎஸ் வசம் வந்து விட்ட போதிலும் தொடர்ந்து, ஓபிஎஸ் நீதிமன்றங்களை நாடி வருகின்றார்.
தேர்தல் நெருங்கும் சூழலில் கட்சியில் சில சலசலப்புகள் தொடர்ந்து நீடித்த வண்ணம் உள்ளன. தங்கள் அணியே வரும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்றும் ஓபிஎஸ் தரப்பு அவ்வப்போது பேசி வருவது வழக்கமாகி விட்டது.
கட்சிலேயே இல்லாதவர்
இந்த சூழலில் தான், அதிமுகவின் பொதுச்செயலாளரான இபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அம்மனுவில், அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர் செல்வம், சமூக வலைதளங்களில் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு வருவதை சுட்டிக்காட்டி, அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என இபிஎஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ள நிலையில், வழக்கின் விசாரணையை மார்ச் 12-ஆம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.