ஏய் ஏய் எதுக்கு அடிக்குறிங்க? ஆட்சி மாறும் பாரு - போலீசிடம் எகிறிய எடப்பாடியார்
சட்டமன்றத்தில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
சட்டமன்ற கூட்டத்தொடர்
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. 2 ம் நாளான இன்று, அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் தீவிரமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்க்காக அவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். சட்டசபை தொடங்கியதும் அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு கேள்வி நேரம் முடிந்த பிறகு தான் அனுமதிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
எம்எல்ஏக்கள் வெளியேற்றம்
ஆனால் அதை ஏற்க்காமல் சில எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன்பு வந்து போஸ்டர்களை கையில் பிடித்து அமளி செய்தனர். இதையடுத்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதையடுத்து அமளி செய்த அதிமுக எம்எல்ஏக்களை குண்டு கட்டாக வெளியேற்றினர் சட்டமன்ற காவலர்கள்.
அப்போது இருக்கையில் இருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டசபையில் குழப்பம் ஏற்பட்டது. அதன்பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
எடப்பாடி பழனிச்சாமி
அதன் பின் எம்எல்ஏக்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கியதற்காக சட்டசபைக்கு வெளியே அதிமுக எம்எல்ஏக்களுக்கும், போலீசாருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அதிமுக எம்எல்ஏக்களை சூழ்ந்து கொண்டு நின்றதால் நெரிசலான சூழல் உருவானது.
இந்நிலையில் திடீரென்று கோபமடைந்த எடப்பாடி பழனிச்சாமி போலீஸ் அதிகாரிகளை நோக்கி ‛‛ஏய்.. ஏய்'' எனக்கூறி ஆள்காட்டி விரலை உயர்த்தி கொண்டே, ‛‛ஏன் எங்களை அடிக்கிறீங்க.. பாரு ஆட்சி மாறும்'' என கோபத்தில் எச்சரித்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.