திமுக வெல்வது போலி வாக்காளர்களால் தான் - அமைச்சர் துரைமுருகனுக்கு எடப்பாடி பதிலடி
சென்னையில் திமுக வெல்வது போலி வாக்காளர்களால் தான் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
போலி வாக்காளர்கள்
விருதுநகர், சாத்தூர் பகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மதுக்கடைகளில் கூடுதல் பணம் வசூலிக்கின்றனர்.
இதுகுறித்து விற்பனை பிரதிநிதியிடம் கேட்டால் மேலிடத்து உத்தரவு என்பதால், நாங்கள் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கிதான் ஆக வேண்டும் என்று கூறுகிறார். ஒரு நாளைக்கு ஒன்றரைக் கோடி பாட்டில்கள் விற்பனையாகின்றன. அந்த வகையில், 15 கோடி ரூபாய் மதுபானங்கள் விற்பனை மூலமாக மேலிடத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.
மாதத்துக்கு 450 கோடி மதுக் கடைகளில் மூலம் சென்று கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 5,400 கோடி. 4 ஆண்டுகளில் சுமார் 25 ஆயிரம் கோடியை கொள்ளை அடித்த அரசாங்கம் திமுக அரசாங்கம். 10 ரூபாய் மந்திரி என்றே மக்களே செந்தில் பாலாஜிக்கு பெயர் வைத்துவிட்டனர்.
இபிஎஸ் குற்றச்சாட்டு
10 ரூபாய் என்றால் உடனடியாக மக்கள் செந்தில் பாலாஜி என்று கூறிவிடுவார்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 50 மாதங்கள் ஓடிவிட்டன. தமிழகத்தில் போதைப் பொருள்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். ஆனால், திமுகவினர் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.
பெரம்பூர் தொகுதியில் 12,085 போலி வாக்காளர்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. டி நகர் சட்டமன்றத் தொகுதியில் பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் போலி வாக்காளர்களால் தான் திமுக வெற்றி பெறுகிறது.
மாநகாராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்துக் கொடுத்தார். ஆர்.கே. நகர் தொகுதியில் மட்டும் 27,779 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். திமுக தான் போலி வாக்காளர்களை இணைக்க துடித்து கொண்டிருக்கிறது.
சென்னையில் திமுக வெல்வது போலி வாக்காளர்களால் தான். வாக்காளர் பட்டியலில் இருக்கும் குளறுபடிகள் குறித்து திமுக தான் வேச வேண்டும். அதிமுகவால் எப்படி போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.