கூட்டம் கூடுவதெல்லாம் விஷயமல்ல; 11வது முறையும் தோல்விதான் - அதிமுகவை சீண்டிய செந்தில் பாலாஜி!
எடப்பாடி பழனிசாமி 11வது முறையாகவும் தோல்வியை சந்திப்பார் என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின்
கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. அதில் விண்ணப்பம் கொடுத்து தீர்வு காணப்பட்ட பயனாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சான்றிதழ் வழங்கினார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக திமுக தரப்பில் மகளிருக்கு உரிமைத் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தது. அதற்கு போட்டியாக அதிமுக தரப்பில் ரூ.1,500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதிமுகவின் வாக்குறுதிகளை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல், திமுகவுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்கினார்கள். மகளிர் உரிமைத் தொகை விஷயத்தில் தற்போது விடுபட்டவர்களுக்கும் முகாம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே தேர்தல் களம் நெருங்குவதால், முன்கூட்டியே வாக்குறுதியை அளிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
செந்தில் பாலாஜி உறுதி
அப்படியாவது மக்களிடத்தில் வரவேற்பைப் பெற முடியுமா என்று முயற்சிக்கிறார்கள். ஒரு தொகுதியில் ஒரு இடம் அல்லது 2 இடத்தில் கூட்டம் நடக்கிறது. சாதாரணமாக 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை கூடுகிறார்கள். 5 ஆயிரம் வருகிறார்கள் என்று கூட வைத்துக் கொள்வோம்.
ஆனால் ஒரு தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் உள்ளன. 3 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் இடத்தில் 3 ஆயிரம் பேர் கூடுவதை சிலர் பெரிதுபடுத்தி காட்டுகிறார்கள். மக்களின் மனநிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அரசாக தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றாலும் கூட, மாநில அரசின் நிதியை மூலம் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளார். அதனால் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக ஓராண்டுக்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி கொடுத்தாலும், அதனை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை.
இதுவரை 10 தேர்தலில் தோல்வியடைந்த பழனிசாமி, இனி 11வது முறையாகவும் தோல்வியை சந்திக்க உள்ளார். மக்கள் அதனை தான் எதிர்க்கட்சித் தலைவருக்கு பரிசாக அளிக்கப் போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.