திமுக கூட்டணி உடையப்போகுது; கண்டிப்பா மாறும் - ஷாக் கொடுத்த இபிஎஸ்!
திமுக கூட்டணி உடையப்போவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டணி உடையும்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில் தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம் என பிரச்சார பயணம் தற்போது தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
அதன்படி நெல்லையில் பொதுமக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திருநெல்வேலி அதிமுக கோட்டை என்று வருணபகவான் அருள்புரிந்து கூறிவிட்டார். பாளையங்கோட்டையிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு நீங்கள் அனுப்பிவைக்கவேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலின் போகிற இடமெல்லாம், 'திமுக கூட்டணி பலமான கூட்டணி' என்கிறார். எப்போது வேண்டுமானாலும் அந்த கூட்டணி உடையும். கூட்டணியை நம்பியிருப்பவர்கள் அவர்கள், நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம். நீங்கள் தான் எஜமானர்கள், கூட்டணி காலத்துக்கேற்ப மாறும், மக்கள் எடுக்கும் முடிவு நிலையானது.
உங்கள் முடிவின்படி அதிமுக கூட்டணி வெல்லும். திமுக ஆட்சிக்கு வந்து 50 மாத காலமாகிவிட்டது. மக்கள் படுகின்ற துன்பம் ஏராளம். விவசாயிகள், ஆசிரியர்கள் என எல்லோரும் போராட்டம் நடத்துகிறார்கள். அந்தளவுக்கு துன்பம். 525 அறிவிப்புகளை வெளியிட்டு 98% நிறைவேற்றினோம் என்று பச்சைப் பொய் சொல்கிறார்கள்.
இபிஎஸ் விமர்சனம்
திமுக அவர்கள் குடும்பத்துக்கான வருமானத்தை தான் பார்ப்பார்கள். எப்போது பார்த்தாலும் மத்திய அரசை குறை சொல்கிறார்கள். திமுக மத்தியில் 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. உண்மையில் மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம்.
எதுவும் செய்யாமல் இப்போது பாஜக எதுவும் செய்யவில்லை என்று பரப்புரை செய்கிறார். உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை ஏன் பயன்படுத்தவில்லை? அதிமுக மற்றும் பாஜகவுக்கும் திமுகவை வீழ்த்துவதே ஒரே நோக்கம். அதற்காகவே கூட்டணி அமைத்திருக்கிறோம்.
பாஜகவோடு அதிமுக கூட்டணி அமைத்தவுடன் திமுக கூட்டணி ஜெயிக்காது என்ற பயம் ஸ்டாலினுக்கு வந்துவிட்டது. அதிமுக பாஜக கூட்டணி வெல்லும் என்று ஸ்டாலினே நம்பிவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.