கருணாநிதி குடும்பத்தில் பிறக்கும் ஆண் பிள்ளை..இது என்ன மன்னர் பரம்பரையா? -எடப்பாடி அட்டாக்!
அதிமுகவைக் கருணாநிதியால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அதிமுகவின் 53வது தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சியில் எந்த காலத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுத்ததாகச் சரித்திரம் கிடையாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசும்போது, பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது. இதனால் அவர் பல இன்னல்களைச் சந்தித்தார்.
மிகவும் இக்கட்டான சுழலில் மத்தியில் தான் அதிமுக தொடங்கப்பட்டது. எம்ஜிஆர் காலத்திலும் சரி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலும் சரி, தற்போதும் சரி பல போராட்டங்களை அதிமுக சந்தித்துக் கொண்டே தான் இருப்பதாகக் கூறினார்.
மன்னர் பரம்பரையா?
தொடர்ந்து பேசியவர்,’’ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்கச் சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் திமுகவிற்கு ஆதரவாகச் சிலர் எதிர்த்து வாக்களித்தனர்.அப்போது தான் யார் எப்படிப்பட்டவர்கள் என்று கண்கூடாகத் தெரிந்தது. ஆனால் அப்படிப்பட்ட எட்டப்பர்களுக்கு கட்சியில் உயரிய பதவி வழங்கினோம்.
பல லட்சம் பேர் இரவு பகல் பாராது உழைத்து அதிமுக ஆட்சி அமைத்ததைக் கலைப்பதற்குச் சிலர் துணை போனதாகக் கூறினார். மேலும் அதிமுக எப்போதும் ஒன்றாகத்தான் உள்ளது. அதிமுகவைப் பலவீனப்படுத்துவதற்காக வேண்டுமென்றே திமுக நாடகம் போடுகிறது என்று கூறியவர்,’’திமுகவின் குடும்பத்தில் தமிழக அரசு சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது.
அதிமுகவைக் கருணாநிதியால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை, ஸ்டாலினாலும் முடியவில்லை. தற்போது, வாழையில் இடைக்கன்று முட்டி வருவதைப் போல் உதயநிதி வந்துள்ளார்.
கருணாநிதி குடும்பத்தில் ஒரு ஆண் பிள்ளை பிறந்தால் அவர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டுமா? இது என்ன மன்னர் பரம்பரையா?எனக் கேள்வி எழுப்பினார்.