ஸ்டாலினுடன் இணைந்து ஓ.பி.எஸ் துரோகம் செய்துவிட்டார் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
ஓ.பன்னீர்செல்வம் செய்தது மிகப்பெரிய துரோகம் எனவும், ரவுடிகளை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியுள்ளார் எனவும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொது குழு கூட்டம் நடத்த ஓ. பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தாக்கல் செய்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் இன்று காலை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
காயமடைந்தவர்களை சந்தித்த எடப்பாடி
இதனிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் காலையில் நடந்த மோதலில் காயமடைந்த தொண்டர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
அதிமுக பொதுக்குழு நடக்கும் போது, கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் சமூக விரோதிகள் புகக்கூடும் என தகவல் வந்த உடன் ராயப்பேட்டை போலீஸ் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தோம்.
ஆனால், இன்று நடந்தது, எங்களுக்கு கிடைத்த தகவல் உண்மை என்பது நிரூபணம் ஆகி உள்ளது. கமிஷனர் போதிய பாதுகாப்பு அளித்ததாக தெரியவில்லை. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மனு அளித்தும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
பன்னீர்செல்வம், அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தது மட்டும் அல்லாமல், ரவுடிகளை அழைத்து கொண்டு நிர்வாகிகளை தாக்கியது கண்டனத்திற்குரியது. தொண்டர்களை தாக்கியது மிகமிக கெடூரமானது.
துரோகிகளுடன் இணைந்து ஸ்டாலின் போட்ட சதி திட்டம்
திமுக உதவியுடன் பன்னீர்செல்வம் குண்டர்கள் அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். எந்த ஒரு தலைவராவது தனது கட்சியினரை தாக்குவார்களா ? முதல்வர், துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளராக ஆக்கியதற்கு பன்னீர்செல்வம் தகுந்த வெகுமதியை அளித்துள்ளார்.
அதிமுக.,வில் உயர்ந்த பதவியை வகிந்த அவர் செய்தது மிகப்பெரிய துரோகம். ரவுடிகளை அழைத்து வந்து பன்னீர்செல்வம் தாக்குதல் நடத்தியது வேதனை அளிக்கிறது.
31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியின் நிர்வாகிகளுக்கே இந்த நிலை தான் என்றால், சாமானியர்களுக்கு என்ன நிலை என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
துரோகிகளுடன் இணைந்து ஸ்டாலின் போட்ட சதி திட்டம் தான் இது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. பன்னீர்செல்வம், எந்த காலத்திலும் மக்களுக்கு நன்மை செய்தது கிடையாது எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
அதிகாரத்தை எடுக்கும் ஈபிஎஸ் .. அதிமுகவிலிருந்து நீக்கப்படும் ஓபிஎஸ்