அவரை சந்திச்சதுல என்ன தப்பு; ஸ்டாலின் பிரதமர் வீட்டு கதவை தட்டலையா? கொந்தளித்த இபிஎஸ்!
முதலமைச்சரும், உதயநிதியும் பிரதமரின் கதவை தட்டினா சரியா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சுற்றுப்பயணம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், "என்னுடைய எழுச்சி சுற்றுப்பயணம் மூலம் 46 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 15 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். சுற்றுப்பயணித்தில் மக்களின் உற்சாகம், ஆரவாரம் பார்க்கும்போது 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.
பெரிய கட்சி வரும்போது சொல்கிறேன். வியூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை இல்லை. அவர்களை சஸ்பெண்ட் செய்கிறார்கள். நேர்மையான காவல்துறை அதிகாரியை பழிவாங்குவது சரியல்ல.
சாடிய இபிஎஸ்
தவறுதலாக பேசி அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க முயற்சிக்கிறார்கள். முதலமைச்சரும், உதயநிதியும் பிரதமரின் கதவை தட்டினார்கள் தானே. அவர்கள் தட்டினால் சரி. அதுவே நான் உள்துறை அமைச்சரை சந்தித்தால் தவறா. அவர் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் தானே.
அதில் என்ன தவறு இருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே உறுதியாகியுள்ளது. கட்சியில் சிலவற்றை மட்டுமே வெளிப்படையாக சொல்ல முடியும். எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல முடியாது. அதிமுகவில் எப்போதோ உறுப்பினர் சேர்க்கை முடிந்துவிட்டது. திமுக அனைத்து செல்வாக்குகளையும் இழந்துவிட்டதால் வீட்டுக்கு சென்று ஓடிபி வாங்கி கொண்டிருக்கிறது.
நாங்கள் மக்களிடம் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை கொடுத்து, அதற்கு மார்க் அடிப்படையில் டிக் செய்து கொடுக்கலாம். விருப்பம் இல்லாவிடின் அவர்கள் விட்டுவிடலாம். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கீழ் தரமாக பேசினார்கள். நான் எந்த இடத்திலும் மரியாதை தவறி ஒருமையில் பேசவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.