வீட்டு மனை இல்லாத ஏழைகளுக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்படும் - எடப்பாடி பழனிசாமி
தைப்பொங்கலை கொண்டாட அனைத்து குடும்பத்திற்கும் ரூ.2500 வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
2026 சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!" என்ற பெயரில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ரூ.16000 கோடியில் தொங்கப்பட்ட காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம், திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை நியாயம் கிடைக்கவில்லை.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தால் புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்கள் பயன் பெறுகின்றனர்.
புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்களுக்காக ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த பகுதியில் அதிகம் விளையும் முந்திரியில் உள்ள கொட்டையை அகற்ற, மானிய விலையில் அதிமுக ஆட்சியில் இயந்திரம் வழங்கப்படும்.
இலவச வீடுகள்
வீட்டு மனை இல்லாத ஏழைகள், தாழ்த்தப்பட்டோருக்கு வீட்டு மனை கொடுத்து, இலவச வீடுகள் கட்டித் தரப்படும். தைப்பொங்கலை கொண்டாடும் விதமாக அனைத்து குடும்பத்திற்கும் ரூ.2500 வழங்கப்படும்.
அதிமுக எப்படி பாஜகவோடு கூட்டணி வைக்கலாம் என்கிறார்கள் திமுகவினர். இது நம்ம கட்சி. இவங்களுக்கு ஏன் கசக்குது? 1999ல் பாஜகவோடு திமுக கூட்டணி வைத்தபோது, அது மதவாத கட்சியாக தெரியவில்லையா?
திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி. அதற்கு ஸ்டாலின் சேர்மன். குடும்ப உறுப்பினர்கள் கம்பெனியின் இயக்குநர்கள். கருணாநிதி அதற்குப் பிறகு ஸ்டாலின் அதற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் அதற்குப் பிறகு இன்பநிதினு ஒருத்தர் வந்து விட்டார்.
இன்பநிதி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று ஒரு அமைச்சர் கூறுகிறார். அப்படிப்பட்ட அடிமை அமைச்சர்கள் இருக்கின்ற வரை நாடு உருப்படுமா?
உதயநிதிக்கு என்ன தகுதி?
உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது. கருணாநிதியின் பேரன் ஸ்டாலினின் மகன். இந்த அடையாளத்தை வைத்துக்கொண்டு இந்த நாட்டை ஆள பார்க்கிறார்கள். விட முடியுமா? தமிழ்நாடு இவர்களின் குடும்ப சொத்தா? ஆண்டாண்டு காலமாக இவர்கள்தான் பதவியில் இருக்க வேண்டுமா?
திமுக கட்சியில் இருந்தாலும் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் பதவியில் வர முடியும். ஏன் நாங்க எல்லாம் ஆட்சிக்கு வந்தா பிடிக்காதா? விஜயபாஸ்கர் கூட முதல்வராகலாம்.
தொடர்ந்து இவர்கள் வெற்றி பெற்று வந்தால், கந்தர்வ கோட்டையையும் பட்டா போட்டு விடுவார்கள் ஜாக்கிரதையாக இருங்கள். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல் 2026 சட்டமன்றத் தேர்தல்.
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு, அற்புதமான ஆட்சி, தமிழ்நாட்டில் மலர அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள்.
அதிமுக, கூட்டணிக்காக கடையை விரித்து வைத்துள்ளனர் வியாபாரம் ஆகவில்லை என்று கூறுகின்றனர். அதிமுக ISI முத்திரை மாதிரி மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி.
உங்கள் கட்சி மாதிரி வீடு வீடாக போய் கதவைத் தட்டி திமுகவில் உறுப்பினராக சேருங்கள் என்று கெஞ்சுகின்ற கட்சி அல்ல அதிமுக. வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்ப்பதற்கு பிச்சை எடுத்ததாக இந்தியாவில் எந்தக் கட்சியாவது உண்டா?” என பேசினார்.