விஜய் அவர்களை மட்டுமே நம்பியுள்ளார்; ஸ்டாலின் குழப்புகிறார் - எடப்பாடி பழனிசாமி
விஜய் முழுக்க ரசிகர்களையே நம்பியுள்ளார் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
திமுகவிற்கு துணிவில்லை
NDTV நடத்திய Tamilnadu Summit நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக 2026 இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பேசிய அவர், " அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் ஒரே குடும்பம் அதிகாரத்தில் இருப்பதை மக்கள் வெறுக்கிறார்கள்.
திமுகவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தலைமை பொறுப்புக்கு வர முடியும். ஆனால் அதிமுகவில் யார் உண்மையாக உழைக்கிரார்களோ, அவர்கள் முதல்வராக முடியும்.
வாரிசு அரசியலை முடிவுக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக 2026 இருக்கும்.
அதிமுகவை எதிர்க்க திமுகவிற்கு துணிவில்லை. என்.டி.ஏவை உள்ளே இழுத்து குழப்புகின்றார் மு.க.ஸ்டாலின்.
விஜய் ரசிகர்களை நம்பியுள்ளார்
என்டிஏ கூட்டணி தேசிய அளவில் பாஜகவால் உருவாக்கப்பட்டது. அதற்கு தமிழ்நாட்டில் அதிமுக தான் தலைமை. அதனை அமித்ஷாவும் கூறிவிட்டார். இப்பொழுது நடக்கவுள்ள தேர்தல் தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான். மத்தியில் யார் வேண்டும் என்பதற்கு அல்ல.
பாஜக கூட்டணியில் இணைய எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. திமுக, 1999 நாடாளுமன்ற தேர்தலில் ஏன் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது?
விஜய் இப்போதுதான் கட்சி தொடங்கியுள்ளார். இதுவரை ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. ஒரு தேர்தலிலாவது போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை நிரூபிக்கட்டும்.
விஜய் சிறந்த நடிகர் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.ஆனால் அவர் முழுக்க முழுக்க தனது ரசிகர்களையே நம்பியுள்ளார். நாங்கள் மக்களை நம்பியுள்ளோம்" என பேசியுள்ளார்.