ஸ்டாலின் கீழ்தரமான அரசியல் ஆதாயம் தேடுகிறார் - எடப்பாடி பழனிசாமி பதிலடி
ஸ்டாலின் தவறான தகவலை வெளியிட்டு கீழ்தரமான அரசியல் ஆதாயம் தேடுவது வெட்கக்கேடானது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்க தீர்மானம்
தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்தை அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகன் முன் மொழிந்தார். அந்த தீர்மானம் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசினர்.
ஸ்டாலின் விமர்சனம்
அந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் வந்தபோதே திமுக எம்பி.க்கள் எதிர்த்திருக்க வேண்டும். முதலமைச்சர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை எங்களிடம் காட்டவில்லை” என ஆவேசமாக பேசினார்.
"நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை வரவிடமாட்டேன். ஒருவேளை டங்ஸ்டன் திட்டம் வந்தால் நான் முதலமைச்சராக இருக்க மாட்டேன்" என சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார்.
இதன் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், "சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் திரு. பழனிசாமி நடிக்கிறார்" என விமர்சித்திருந்தார்.
தம்பிதுரை விளக்கம்
இந்நிலையில், அதிமுக எம்.பி தம்பிதுரை, சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவை ஆதரித்து பேசியதை திமுகவினர் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
"யூபிஏ அரசாங்கத்தில் இருந்த ஊழலை தடுக்க தனியாருக்கு நேரடியாக உரிமம் தரக்கூடாது, ஏல முறையில் வர வேண்டும் என்பதைதான் ஆதரித்தேன். மதுரையில் டங்ஸ்டன் நிறுவனத்திற்கு ஏலம் விட வேண்டும் என்று எந்த காலத்திலும் பேசவில்லை" என தம்பிதுரை விளக்கமளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பதிலடி
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "UPA அரசில் திமுக அங்கம் வகித்த போது, கனிம வளங்களை ஏலம் விடாமல், தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளை அடிக்கப்பட்டது மற்றும் UPA அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது கனிமச் சுரங்கங்களை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்கினார்கள்.
NDA ஆட்சியில் கனிம வள உரிமங்கள் ஏலமுறையில் விடப்படும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வந்து, கனிம வள ஊழலை தடுக்க ஏலமுறையை ஆதரித்துதான் திரு. தம்பிதுரை அவர்கள் பேசி உள்ளார். தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப்பற்றி திரு. தம்பிதுரை நாடாளுமன்றத்தில் எவ்வித கருத்தையும் பேசவில்லை.
UPA அரசில் திமுக அங்கம் வகித்த போது, கனிம வளங்களை ஏலம் விடாமல், தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளை அடிக்கப்பட்டது மற்றும் UPA அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது கனிமச் சுரங்கங்களை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்கினார்கள்.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) December 9, 2024
NDA ஆட்சியில் கனிம வள உரிமங்கள் ஏலமுறையில் விடப்படும்…
இந்த கனிம வள திருத்தச் சட்டம் 2023 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது, திமுக M.P-க்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. உண்மையை மறைத்து, என்னைப்பற்றி இப்படி தவறான தகவலை திரு. ஸ்டாலின் ‘X’ வலைதளத்தில் வெளியிட்டு கீழ்தரமான அரசியல் ஆதாயம் தேடுவது வெட்கக்கேடானது. கேவலமானது" என குறிப்பிட்டுள்ளார்.