நாடாளுமன்றத்தில் ஆதரவளித்து விட்டு சட்டப்பேரவையில் நடிக்கிறார் பழனிசாமி - முதல்வர் ஸ்டாலின் தாக்கு

M K Stalin ADMK DMK Edappadi K. Palaniswami
By Karthikraja Dec 09, 2024 11:08 AM GMT
Report

அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று(09.12.2024) காலை 09.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்களின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.  

tamilnadu assembly

இதனையடுத்து, மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை அவை முன்னவரான அமைச்சர் துரை முருகன் முன் மொழிந்தார்.

டங்ஸ்டன் சுரங்க தீர்மானம்

அதன் பின்னர் இந்த தீர்மானம் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசினர். இந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் வந்தபோதே திமுக எம்பி.க்கள் எதிர்த்திருக்க வேண்டும். பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை எங்களிடம் காட்டவில்லை” என ஆவேசமாக பேசினார். 

mk stalin  

இதற்கு விளக்கமளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "டங்ஸ்டன் திட்டத்தைத் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை வரவிடமாட்டேன். ஒருவேளை டங்ஸ்டன் திட்டம் வந்தால் நான் முதலமைச்சராக இருக்க மாட்டேன்" என கூறினார்.

துரோக வரலாறு

இந்நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரவளித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் திரு. பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார். 

சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன். தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது" என குறிப்பிட்டுள்ளார்.