அதிமுக காணாம போய்டுமாம்.. கண்டுபிடிச்சு கொடு - பாஜக நிர்வாகிக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்!
பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.ஸ்ரீனிவாசனின் கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். பின்னர் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மக்களவைத் தேர்தலுக்குப் பின் அதிமுக என்ற கட்சியே இருக்காது என பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கூறியதாவது "இப்போது நடக்கும் 2024 மக்களவைத் தேர்தலோடு அதிமுக காணாமல் போகுமாம். கண்டுபிடிச்சு கொடு நீ. ஏய்.. உன்னைப் போல எத்தனை பேரை பார்த்தவைங்க அதிமுக.
ஆவேச பேச்சு
நான் உட்பட இந்த மேடையில் இருப்பவர்கள் 50 ஆண்டு காலமாக இந்த கட்சிக்காக உழைத்தவர்கள். உன்னைப் போல சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் அல்ல. இரவு பகல் பாராமல் உழைக்கும் உழைப்பாளிகள் நாங்கள். உங்களைப் போல வெற்று விளம்பரத்தில் அரசியல் நடத்தவில்லை.
அதிமுக இருக்காது என்று சொல்கிறார். பொறுத்திருந்து பார். 1998ல் பாஜகவை தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியதே அதிமுக தான். பாஜகவின் தாமரை சின்னத்தை தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான். எங்களைப் பார்த்தா கட்சி இருக்காதுன்னு சொல்ற? என ஆவேசமாகப் பேசினார்.